கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த சாமுவேல் – லலிதாம்பிகா தம்பதியின் மகள் அபியா (15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருடன் ஒரே வகுப்பில் படித்து வந்த நெருங்கிய தோழியான தீர்த்தா என்ற மாணவி அண்மையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் அபியா கடந்த சில நாட்களாகக் கடும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல வீடு திரும்பிய அபியா, தனது அறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் அறைக்குச் சென்று பார்த்தபோது, அபியா தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நெருங்கிய தோழியின் தற்கொலையால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே அபியாவும் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
