திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடத்தூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் பறிக்கும் தொழிலாளர்களான தினேஷ் (17), சபரி (16), பாலபிரகாஷ் (26) மற்றும் குணசேகரன் (16) ஆகிய 4 பேரும் நேற்று இரவு ஒரே பைக்கில் கணியூர் வழியாக மடத்துக்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மடத்துக்குளம் – காரத்தொழுவு ஆஸ்பத்திரி மேடு பகுதியில் வந்தபோது, எதிரே மடத்துக்குளத்தில் இருந்து கணியூர் நோக்கி வந்த லாரி ஒன்று இவர்களது பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ், சபரி, பாலபிரகாஷ் ஆகிய 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த குணசேகரன் உடுமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
