தமிழ்நாடு முழுவதும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் நேற்று முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 25ஆம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்களது சங்கத்திற்கு உட்பட்ட உரிமையாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஜேசிபி, ஈச்சர் போன்ற வாகனங்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு எரிபொருள் விலை, மூலப்பொருட்கள் விலையை குறைக்க வேண்டும், வரி வகைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டமானது நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள காலி இடத்தில் கோயமுத்தூர் மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இன்று கோவை மாவட்ட நலச்சங்க தலைவர் சந்திரசேகர், பொருளாளர் ரவிசந்திரன், செயலாளர் சசிகுமார், துணை தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், டீசல், ஆயில், உதிரி பாகங்கள் விலையேற்றத்தின் காரணமாக இந்த வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதாகவும் பொதுமக்களும் கட்டுமான பணியாளர்களும் தங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். புதிய வாகனங்களை வாங்கும் பொழுது 15 ஆண்டுகளுக்கு வரி வசூல் செய்யப்படுவதாகவும் ஒன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அந்த வாகனங்களை விற்கும் பொழுது சில சிக்கல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினர்
இந்த அரசாங்கத்தில் சட்ட விதிமுறையை செயல்படுத்தும் பொழுது நடைமுறை சிக்கல்கள் என்பதுதான் பெரும் பிரச்சனையாக இருப்பதாகவும் அதனை சரி செய்து கொடுத்தால் பிரச்சனை சரியாகிவிடும் அதற்கான தீர்வை காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
