Skip to content
Home » இளைஞர்களை கடத்தி பணம் பறிக்கும் கராச்சி போலீசார்…. பாகிஸ்தானில் அவலம்

இளைஞர்களை கடத்தி பணம் பறிக்கும் கராச்சி போலீசார்…. பாகிஸ்தானில் அவலம்

  • by Senthil

பாகிஸ்தான் நாட்டின் ஜகாரியா கோத் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று உள்ளது. அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் பணய தொகை தர வேண்டும் என அந்த கும்பல் கூறியுள்ளது.  இதன்பின் டீல் பேசி ரூ.10 லட்சம் பெற்று கொள்வது என இரு தரப்பிலும் உடன்படிக்கை ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பணய தொகையை வாங்க வரும் கடத்தல்காரர்கள் யார் என கண்டறிந்து அவர்களை பிடிக்க தயாராக இருந்தனர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரிந்தது. 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி விட்டார். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

அவர்களில் 2 பேர் கராச்சி நகர போலீசார் என்பதும், அவர்கள் பணியில் இருப்பவர்கள் என்றும் தெரிய வந்தது. தப்பிய நபரும், மாலிர் மண்டல காவல் பிரிவை சேர்ந்தவர் என டான் பத்திரிகை வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. தொடர் விசாரணையில், இளைஞர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. இதில், இளைஞர்களை சிறை பிடித்து, ஷா லத்தீப் நகர காவல் நிலையத்திலேயே அடைத்து வைத்திருந்தது தெரிய வந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த காவல் நிலைய உயரதிகாரி உத்தரவின்பேரிலேயே இளைஞர்கள் கடத்தப்பட்டனர் என விசாரணையில் தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், மாலிர் நகர போலீசாரை அவர் கைகாட்டி குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த கடத்தலில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுத்து உள்ளார். எனினும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்த காவல் நிலையத்தில் இருந்து, கடத்தப்பட்ட இளைஞர்கள் சிலர் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இதன்படி, 3 நண்பர்களை கடத்தி, வடக்கு நசீமாபாத் காவல் நிலையத்தில் வைத்திருந்த விவகாரத்தில் 2 போலீஸ் உயரதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ரூ.5 லட்சம் பணய தொகை கேட்டு அதனை வாங்க, கடத்தல்காரர்கள் பல்வேறு இடங்களுக்கு வரும்படி கூறியுள்ளனர். சிந்த் மாகாண அரசு, இதுபோன்ற ஆபத்து தரும் குற்றவாளிகளை நாடு முழுவதும் செயல்பட எப்படி அனுமதித்து உள்ளது என்றும் டான் வெளியிட்ட அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. நாட்டின் பெரிய நகரம் என அறியப்படும் கராச்சி நகர போலீசார் சீருடை அணிந்து கொண்டு குற்றவாளிகளாக பாகிஸ்தானில் உலா வருகின்றனர் என்றும் தெரிவித்து உள்ளது. சமீப ஆண்டுகளில் காவல் அதிகாரிகள் பலர் குற்ற செயல்களுக்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் குற்ற பதிவுகளுக்காக காவல் படையில் இருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!