Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்லவர் கால சிவலிங்கம்- கண்டெடுப்பு

தமிழக வரலாற்றில் தனிச்சிறப்பிடம் பெற்ற ஊர்கள் இளங்காடு மற்றும் நியமம் ஆகும். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள இவ்வூர்களுக்கு இடையில் அமைந்துள்ள செங்கண்மேடு என்ற திடலில் இளங்காட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவர் குழி தோண்டும்பொழுது பழங்கால காசு ஒன்று கிடைத்தது. காசு கிடைத்த செய்தியினை

விஷ்ணம்பேட்டை கோயில் செயல் அலுவலர் கோபி வரலாற்று ஆய்வாளர் மணி. மாறன் அவர்களிடம் தெரிவித்தார், இதனடிப்படையில் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் மணி. மாறன், வரலாற்று ஆய்வாளர்கள், பணி ஓய்வு

பெற்ற அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், பணி ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர் முனைவர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
சோழர், பல்லவர், முத்தரையர், பாண்டியர், நாயக்கர், மராத்தியர் எனப் பல்வேறு மரபு மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியில் நியமம், இளங்காடு ஆகிய ஊர்கள் அமைந்துள்ளது. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த உ.வே.சா., பாரதிதாசன் போன்ற மிகப்பெரும் தமிழறிஞர்கள் பலர் இளங்காடு சென்று அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றியுள்ளனர். அத்தகு பெருமை மிக்க ஊர் இளங்காடு.
இங்குள்ள செங்கண்மேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து இருந்த சிவலிங்கம் வெளியே எடுக்கப்பெற்று, தற்போது வழிபடப்பட்டு வருகிறது. அதேபோல் அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தோப்பில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஆவுடையுடன் கூடிய ஒரு பெரும் சிவலிங்கம் இருப்பதும் தற்போது கண்டறியப் பெற்றது. இப்பகுதியில் முழுமையாக ஆய்வு செய்தால் மேலும் பல கடவுளர் திருமேனிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. செங்கண்மேட்டில் கிடைத்த பாண்டியர் காசு பற்றி நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமனிடம் கேட்டபொழுது, இக்காசு குறித்த கூடுதல் செய்திகளை வழங்கினார். முதலாம் சடைய வர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1250 – 1284) காலத்தைச் சேர்ந்த இக்காசு 3.30 கிராம் எடை கொண்டதாக உள்ளது. காசின் முன்பக்கம் ஒரு மனிதன் உருவமும், பின்பக்கம் இரண்டு குத்துவிளக்குகளுக்கு நடுவே செங்குத்தாக மீன் ஒன்றும் உள்ளது. காசின் விளிம்பைச் சுற்றி எல்லாந்தலையனான் என்று தமிழில் பொறிக்கப் பெற்றுள்ளது. சுந்தரபாண்டியன் வெளியிட்ட காசுகளில் அவனுடைய ஆட்சியாண்டினை தமிழ் எண் வடிவில் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகிறது. இக்காசில் (௧) ஒன்று என்ற எழுத்து உள்ளது. எனவே, இக்காசு அம்மன்னனின் முதலாவது ஆட்சியாண்டு, அதாவது கி.பி. 1251இல் வெளியிடப்பெற்றுள்ளது. இம்மன்னனின் வெற்றிகளும், சாதனைகளும், கொடைகளும் திருப்பூந்துருத்தி கல்வெட்டில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவன் தன் ஆட்சிக் காலத்தில் பல வகைக் காசுகளை வெளியிட்டுள்ளான்.
சுந்தரபாண்டியன் சிதம்பரம் அருகே தன்னுடைய அண்ணன் விக்கிரம பாண்டியன் பெயரால் விக்கிரம பாண்டிய சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரினை ஏற்படுத்தி அங்கு விக்கிரம பாண்டிய ஈஸ்வரம் என்னும் கோயிலையும் கட்டியுள்ளான். அக்கோயிலில் சிறப்பு பூசைகள் செய்ய தன் பெயரால் ‘எல்லாந்தலையான பெருமாள்’ என்னும் நிவந்தங்கள் வழங்கியுள்ளான். இம்மன்னன் பல வெற்றிகளை அடைந்ததால் ‘எம்மண்டலமும் கொண்டருளிய அல்லது அனைத்துலகமும் கொண்டருளிய’ என்ற பெயரைப் பெற்றான். இவனுடைய சிறப்புப் பெயரான ‘எல்லாந்தலையனான்’ என்ற பெயர் கொண்ட செப்புக்காசுகள் பல கிடைத்துள்ளன. சிதம்பரத்தில் பலமுறை துலாபாரம் ஏறி நடராஜப் பெருமானின் கோயிலுக்குப் பொன் வேய்ந்தான். மதுரையில் தன் அண்ணன் விக்கிரம பாண்டியன் பெயரால் ‘விரதம் முடித்த பெருமானான புவனேக வீரன்’ என்ற நந்தவனத்தை எடுப்பித்தான். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள புவனகிரி என்ற ஊர் இவனுடைய பெயரில் புவனேகவீரன்பட்டினம் என்ற பெயரில் அமைக்கப்பட்டதாகும். ஸ்ரீரங்கம், சிதம்பரம் கோயில்களுக்கு பொன் வேய்ந்ததால் ‘பொன்வேய்ந்த மகிபதி’ என்றும், கேரளனை வென்றதால் ‘கேரளனை வென்றான்’ என்றும் போற்றப்பெற்றான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!