Skip to content
Home » பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…

பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…

  • by Senthil

தஞ்சை  ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையம் மற்றும் கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் தஞ்சை அருகே குருவாடிப்பட்டியில் உள்ளது. மூன்று சர்வே எண்கள் கொண்ட நிலத்தின் பட்டாவை பெயர் மாற்றம் செய்ய இளங்கோவன் கடந்த 3 -ம் தேதி இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார்.

தொடர்ந்து இந்த விண்ணப்பம் மீது குருவாடிப்பட்டி விஏஓவான வீரலெட்சுமி என்பவர் விசாரணை நடத்தி உள்ளார். அப்போது இளங்கோவனை தொடர்பு கொண்டு பட்டா மாற்றம் செய்வது தொடர்பாக பேசியுள்ளார். அதற்கு இளங்கோவன் தனது நிறுவன மேலாளர் அந்தோணி யாகப்பா உங்களிடம் இது தொடர்பாக பேசுவார்

என்று தெரிவித்துள்ளார். பின்னர் அந்தோணி யாகப்பா, விஏஓ வீரலெட்சுமியை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது மூன்று பட்டாவையும் பெயர் மாற்றம் செய்ய தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரத்தை விஏஓ வீரலெட்சுமி லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் நேற்று முன்தினம் வல்லம் வடக்கு விஏஓ அலுவலகத்துக்கு அந்தோணி யாகப்பாவை வர சொல்லியுள்ளார். அங்கு சென்ற அந்தோணி யாகப்பாவிடம் ரூ.5 ஆயிரம் குறைத்துக் கொண்டு, ரூ.25ஆயிரம் லஞ்சம் தருமாறும், இதற்கு அட்வான்ஸாக ரூ.10 ஆயிரத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி யாகப்பா தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை  பெற்றுக்கொண்டு, நேற்று மாலை அந்தோணி யாகப்பா, விஏஓ வீரலட்சுமியை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது பணத்தை தஞ்சாவூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கொண்டு வந்து கொடுக்க விஏஓ வீரலட்சுமி தெரிவித்துள்ளார். இதன்படி அந்தோணியாகப்பா, இ-சேவை மையத்துக்குள் சென்று ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வீரலட்சுமியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி டி.வி.நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருண்பிரசாத் ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விஏஓ வீரலட்சுமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் இதுபோன்று லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் நேரிலோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபாலை 9498105710 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!