Skip to content
Home » பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை… ஒத்திகை நிகழ்ச்சி..

பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை… ஒத்திகை நிகழ்ச்சி..

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூலம் பருவமழை காலங்கள், தீ விபத்து, சாலை விபத்து போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி இன்று (21.9.2023) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், கட்டிடத்தில் ஏற்படும் தீயினை எவ்வாறு அணைக்க வேண்டும், இடிபாடுகள் மற்றும் நீரில் சிக்கிய நபர்கள், கால்நடைகளை கயிறு மூலம் மீட்டல், ஏணி மூலம் மீட்டல், மூச்சுக் கருவி அணிந்து உயிர்களை காப்பாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும்,

தீ விபத்தில் இருந்து காப்பாற்றுதல், சாலை விபத்தில் இருந்து காப்பாற்றுதல், மரம் அகற்றுதல், நீரில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டல், குடியிருப்புகளுக்குள் பாம்பு வந்தால் அவற்றை அச்சுறுத்தாமல் மீட்டு காடுகளுக்குள் விடுதல், தீ வாளிகள், மணல், தீயணைப்பான்களைக் கொண்டு பாதுகாப்பாக தீயை அணைக்கும் முறைகள், பேரிடர் காலங்களில் மரத்துக்கடியில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், வாகனங்களில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினார்கள்.

பேரிடர் காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் தங்கள் உயிரை பணயம் வைத்து பிற உயிர்களைக் காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீ விபத்து, சாலை விபத்து, நீர்நிலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்த புரிதலை உங்களுக்கு விளக்கும் வகையில் இன்று மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் மிதிவண்டிகளில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். இடி மின்னலின் போது மரத்திற்கு அடியில் நிற்கக்கூடாது. மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்வதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. இந்தப் பேருந்து இல்லையென்றால் அடுத்த பேருந்துக்கு காத்திருந்து பயணம் செய்யலாம். எனவே இது போன்று பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிர் மிகவும் அற்புதமானது. அதன் முக்கியத்துவம் மாணவர்களாகிய உங்களுக்குத் தெரியாது. உங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள். எனவே மாணவ மாணவிகள் அனைவரும் எதிர்காலத்தில் தங்களுக்கு தேவையான தற்காப்புகளை கற்றுக்கொண்டு அதனை பின்பற்ற வேண்டும். பேரிடர் காலங்களில் எது செய்ய வேண்டும் எது செய்யக்கூடாது என்பதை மாணவ,மாணவிகள் அறிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று இவ்வாறு பேசினார். இந்நிகழ்வில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் செல்வி ப.அம்பிகா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சா.ரேவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!