Skip to content
Home » பிரதமர் மோடி தொகுதியின் தேர்தல் அதிகாரி…… திருச்சியில் படித்தவர்

பிரதமர் மோடி தொகுதியின் தேர்தல் அதிகாரி…… திருச்சியில் படித்தவர்

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில்  பிரதமர்  மோடி 3வது முறையாக  போட்டியிடுகிறார். இதற்காக நேற்று அவர்  வாரணாசியில்  மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான  எஸ். ராஜலிங்கத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர்  தேர்தல் அதிகாரியை பார்த்து இருகைகையும் கூப்பி  பவ்யமாக வணக்கம் செலுத்தி வேட்புமனுவை கொடுத்தார்.  வேட்புமனுவை பெற்றுக்கொண்ட  எஸ். ராஜலிங்கம் யார் என்று விசாரித்தபோது, அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்து உள்ளது.

அதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்:

மோடி நாட்டின் பிரதமராக இருந்தபோதும், அவர் தேர்தல் அதி்காரி முன் நின்றபடி  வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  தனது நாற்காலியில் இருந்தவாறு  லேசான  புன்முறுவலுடன், அதே நேரம் மகிழ்ச்சியை வெளிக்காட்டாத தோரணையில், அந்த மனுவை பெற்றுக்கொண்டார் தேர்தல் அதிகாரி ராஜலிங்கம்.  தேர்தல் உறுதி மொழியையும் நின்றுகொண்டே படித்தார் பிரதமர் மோடி.

அப்போது  பிரதமருடன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி மனுவின் பரிந்துரையாளர்கள் நால்வர் உடன் இருந்தனர். தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஆட்சியர் ராஜலிங்கம் முன்பாக நேராக சென்று பணிவுடன் நின்றார் பிரதமர் மோடி. தனது இருகரங்களைக் கூப்பி வணங்கியவர் தனது வேட்பு மனுவை ஆட்சியரிடம் அளித்தார்.

பிறகு மனுவை அமர்ந்தபடியே ஆட்சியர் ராஜலிங்கம் சரிபார்க்க, பிரதமர் மோடி அமைதியாக நின்றிருந்தார். பிறகு உறுதிமொழியையும் வாசித்து காண்பித்தவரை அமர்ந்தபடியே ஆட்சியர் ராஜலிங்கம், வணங்கி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுக்கு பின்  ராஜலிங்கம் யார் என்ற தேடல்கள் சமூகவலைதளங்களில் பரவத் துவங்கியது.

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த சுப்பையா – மாலையம்மாள் தம்பதியரின் மூத்த மகன்தான் ராஜலிங்கம். திருச்சி  என்ஐடி பொறியியல் கல்லூரியில்  வேதியியல் பிரிவில் 2003-ல் பட்டம் பெற்றவர். ஒசூரின் சன்பார்க் கெமிக்கல் நிறுவனத்தில் பணியாற்றினார். குடிமைப்பணி தேர்வை விரும்பி ஒரு வருடத்தில் தமது பணியை ராஜினாமா செய்தார்.

2006-ம் ஆண்டில் ஐபிஎஸ் தேர்வில் வென்றவர் உ.பி. மாநிலம் அலிகாரில் பணியை துவக்கினார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் குடிமைப் பணி தேர்வு எழுதினார். இதன் பயனாக 2009-ல் ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்றார்.

தற்போது வாராணசி மாவட்ட ஆட்சியராக ராஜலிங்கம் உள்ளார். அவரின் தலைமை நிர்வாகத்தில் கடந்த 2022 மற்றும் 2023ல் காசி தமிழ் சங்கம விழாக்கள் 2 முறை நடைபெற்றன.  இந்த விழாக்கள் மூலம் பிரதமர் மோடியின் அபிமானத்தை ராஜலிங்கம் பெற்றார்.

பல்வேறு கூட்டங்களில் பிரதமர் மோடி இவரை, ‘மிஸ்டர் ராஜலிங்கம்’ என்று பெயரைக் குறிப்பிட்டு அழைப்பது உண்டு. அந்த அளவுக்கு இருவருக்கும்  நெருக்கம். இதற்கு முன்பும் 2 மாவட்டங்களில் ராஜலிங்கம் கலெக்டராக பணியாற்றி உள்ளார். அங்கும் அவர் சிறப்பாக பணியாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!