Skip to content
Home » பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம், தேர்தல் பிரசார தொடக்கமா?

பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம், தேர்தல் பிரசார தொடக்கமா?

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயணத்தின்போது அவர் 4 மாநிலங்களிலும் ரூ.50,000 கோடி மதிப்பிலான சுமார் 50 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயண விவரம் பின் வருமாறு:
7-ந்தேதி காலை பிரதமர் மோடி டில்லியில் இருந்து சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூருக்கு செல்கிறார். அங்கு அவர் ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடத்தின் ஆறு வழி பாதை உள்பட பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, நிறைவு பெற்ற சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன் பின்னர் ராய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதனை தொடர்ந்து சத்தீஷ்கரில் இருந்து நேரடியாக உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு கீதா பத்திரிகையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.அதன் பின்னர் கோரக்பூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் கோரக்பூர் ரெயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.கோரக்பூர் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார். அங்கு அவர் பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு முதல் சோன் நகர் வரையிலான புதிய பிரத்யேக சரக்கு வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
வாரணாசி-ஜான்பூர் 4 வழிப்பாதை விரிவாக்கத்தையும் அவர் திறந்து வைக்கிறார். மணிகர்ணிகா காட் மற்றும் ஹரிச்சந்திரா காட் ஆகியவற்றை புதுப்பிக்க பிரதமர் அடிக்கல் நாட்டுவார். நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அதன் பின்னர் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து தெலுங்கானா மாநிலம் வாரங்கலுக்கு 8-ந்தேதி புறப்படுகிறார். அங்கு நாக்பூர்-விஜயவாடா வழித்தடத்தின் முக்கிய பகுதிகள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கரீம்நகர்-வாரங்கல் பிரிவின் 4 வழிச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். அதன் பிறகு வாரங்கலில் நடக்கும் பொதுக்கூட்டம் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி வாரங்கலில் இருந்து ராஜஸ்தானின் பிகானேர் நகருக்கு செல்கிறார். அங்கு அடிக்கல் நாட்டி, பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அமிர்தசரஸ் ஜாம்நகர் விரைவுச்சாலையின் பல்வேறு பிரிவுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிகானேர் ரெயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்காக பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதன் பின்னர் பிகானேரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். உத்தரபிரதேசம் தவிர மற்ற 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த 3 மாநிலங்களிலும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரமாகவே தனது நிகழ்ச்சிகளை வடிவமைத்து உள்ளார். கர்நாடகத்தில் படுதோல்வி அடைந்த நிலையில் இந்த மாநிலங்களிலும் தோல்வி அடைந்தால் மக்களவை தேர்தலும் பாஜகவுக்கு மிக கடினமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் மோடி இப்போதே தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாக காங்கிரஸ் வர்ணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!