தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மார்ச் 10ஆம் தேதி மாணவி காணமல் போன நிலையில், மறுநாள் மதியம் 2 மணியளவில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கைதுசெய்யும் வரை, சடலத்தை வாங்கமாட்டோம் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, குற்றவாளிகளைப் பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்குரிய 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகளைப் பெற்று அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
இதனிடையே, காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை வைத்து மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை சம்பவம் நடைபெற்ற 9 நாட்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரிய வந்தது.
தூத்துக்குடி மாவட்ட போக்சோ கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என கோர்ட் அறிவித்தது. குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு எதிரான தண்டனை விவரங்கள் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
