தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நேற்று சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபிசர்ஸ் அலுவலகத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பயிற்சி அளிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் முனைவர். ஜெயந்த் முரளி மற்றும் காவல்துறை தலைவர் முனைவர் தினகரன் ஆகியோர் தலைமையில் NFTs பயன்பாடு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியினை கார்டியன் லிங்க் நிறுவனத்தின் இணை இயக்குநரான அர்ஜூன் ரெட்டி அனைவரும் பயன்பெறும் வகையில் எளிதாக விளக்கினார். இதில், மாநிலம் முழுதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். NFT என்பது தனித்துவமான ஒரு டிஜிட்டல் சொத்து ஆகும். இது Block chain எனும்

தொழில்நுட்பத்தால் இயங்குகிறது. இந்த NFT-களை Rewards-களாக வழங்குவதில் துபாய்க்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது இடத்தில் தமிழக காவல்துறை உள்ளது. NFT-யின் அடுத்தகட்ட தனிப்பட்ட வடிவமைப்பாக SBTs (Soul bound Tokens) என்ற டிஜிட்டல் மெடல்களை அண்மையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி வழங்கினார். இது உலகளாவிய காவல்துறையின் முதல் முயற்சியாகும். பின்னர், இந்நிகழ்ச்சியில் தமிழக அரசால் வழங்கப்பெற்ற லேப்டாப்களை சிலை கடத்தல் தடுப்பு இயக்குனர் ஜெயந்த் முரளி, , இப்பிரிவில் பணிபுரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முதல் ஆய்வாளர் நிலையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் சிறப்பான, விரைவான புலன் விசாரணைக்கு பெரிதும் உதவும் வகையில் அவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.