இந்திய தேர்தல் வரலாற்றில் புதிய முயற்சியாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் தபால் ஓட்டுகளும் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, எந்தெந்த தொகுதிக்கான தபால் வாக்கு என பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலர்கள் பணி நிமித்தமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவி இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் தங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். இதற்காக தபால் ஓட்டுகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் அளிக்கும் தபால் ஓட்டுகள் அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியை ஒவ்வொரு தொகுதியிலும் அதற்கான நோடல் ஆபீசர்கள் செய்வார்கள். இந்த முறை அப்படி இல்லாமல் 39 தொகுதிகளின் தபால் ஓட்டுகளும் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தொகுதி வாரியாக பிரித்து அந்தந்த தொகுதிகளின் நோடல் ஆபீசர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதற்கான பணி திருச்சி கலையரங்கில் இன்று நடக்கிறது. இதற்காக பெரும்பாலான தொகுதிகளின் அதி்காரிகள் காலையிலேயே வந்து விட்டனர். அங்கு தபால் வாக்குகள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில்8400 தபால் ஓட்டுகள் உள்ளன. இவை சம்பந்தப்பட்ட தொகுதிளின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய உத்தரவின்படி திருச்சி கலெக்டர் செய்திருந்தார்.