Skip to content
Home » ரூ.300 கோடி சுருட்டிய திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் அதிபர் வெளிநாடு ஓட்டமா?

ரூ.300 கோடி சுருட்டிய திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் அதிபர் வெளிநாடு ஓட்டமா?

நகைக்கடை சீட்டு, தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு  என  எத்தனை மோசடிகள் நடந்தாலும், நம் மக்கள் ஒருக்காலம் திருந்த போவது இல்லை. நாங்கள் ஏமாந்தே தீருவோம் என்று அடம் பிடித்து நிற்பவர்களை என்ன செய்ய முடியும்? இப்படித்தான்  வீதியில் உட்கார்ந்து விதியே என ஓலமிட வேண்டியது தான்.

திருச்சியிலும் நேற்று இப்படி ஒரு சம்பவம் நடந்தது.  அதாவது கரூர் பைபாஸ் ரோட்டில் ஆரம்பிக்கப்பட்ட பிரணவ் ஜூவல்லர்ஸ் குறுகிய காலத்தில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மதுரை, சென்னை, , நாகர்கோவில்,  கோவை, ஈரோடு, புதுச்சேரி,  ஆகிய   இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது.

இவ்வளவு வேகமாக வளர்ச்சியடைய காரணம், அதன் உரிமையளர்  மதன் செல்வராஜ் ரூம் போட்டு யோசித்த திட்டம் தான். ஆம் இதுவரை நகைக்கடைக்காரர்கள் யாருக்கும் உதிக்காத திட்டம் அவருக்கு உதித்தது. அதன்படி ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால் 2 % வட்டி தரப்படும். 10 மாதம் கழித்து வாங்கினால் 106 கிராம் நகையும் தரப்படும்.

எங்களிடம் வாங்கும் நகைகளுக்கு  சேதாரம், செய்கூலி கிடையாது.

உங்கள் நகைகள் ஏன் வீட்டில் தூங்குகிறது. ?எங்களிடம் தாருங்கள்,  ஒரு வருடம் கழித்து புதிய மாடல் நகைகளை அதே எடையில் புத்தம் புதிதாக வாங்கி கொள்ளலாம் என பல அறிவிப்புகளை அள்ளி விட்டார். அத்துடன் நகை சீட்டுகள் வேறு நடத்தினார். 11 மாதம் கட்டினால் போதும், 12வது மாத தவணையை நாங்களே கட்டி விடுகிறோம் என சொன்னார்கள்.

மக்கள் இந்த அறிவிப்புகளால் ஈர்க்கப்பட்டனர். போதாக்குறைக்கு நடிகர்  பிரகாஷ்ராஜ், இந்த நகைகடையின் விளம்பர தூதர், செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என எல்லா டிவிகளிலும் முழங்கினார்.  முதலுக்கே சேதாரம் வரப்போகிறது என்பதை அறியாத மக்கள்  சீட்டு கட்டினர். பழைய நகைகளை  கொண்டு வந்து பிரணவ் ஜூல்லர்சில் கொடுத்து, அடுத்த வருடம் புதிய நகைகள் வாங்கிக்கொள்கிறேன் என்றனர்.

இப்படியாக கோடி கோடியாக  பணமும் நகையும் குவிந்தது.  பணம் குவிந்ததால்  உரிமையாளர் மதன் செல்வராஜ், தன் தொழிலை விரிவுசெய்ய திட்டமிட்டு, ரியல் எஸ்டேட்டில் குதித்தார்.  ஆனால் ரியல் எஸ்டேட் தான் மதன் செல்வராஜின் பணத்தை முழுங்கி விட்டதாக கூறப்பட்டாலும், அது முழுக்க உண்மை இல்லை என்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சீட்டு நிறைவு பெற்றவர்கள்,  நகையை, பணத்தை கேட்டு சென்றனர். அவர்களுக்கு  செக் வழங்கப்பட்டது.  வங்கி கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆனது. அவர்கள் கடைகளை நோக்கி படையெடுத்தனர்.  முதலில் வந்தவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மக்கள் படையெடுக்க தொடங்கியதும், தாக்குபிடிக்க முடியாமல்  முதன் முதலில் நாகர்கோவில் கடைக்கு பூட்டு போட்டனர். இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்து கடையை முற்றுகையிட்டனர்.

இப்படியாக படிப்படியாக கடைகள் ஒவ்வொரு நகரங்களிலும் மூடுப்பட்டது. இறுதியாக தலைமையகமான திருச்சியிலும் நேற்று முன்தினம் மூடிவிட்டனர். இது நேற்று காலை தான் மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் கடை முன் திரண்டு கண்ணீர் வடித்து கதறினர். நான் 5 லட்சம் கொடுத்தேன், நான் 10 பவுன் நகை  கொடுத்தேன், 20 பவுன் நகை கொடுத்தேன் என  100க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.  தில்லை நகர் போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி விட்டனர்.

இப்போது இந்த வழக்கு  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்  இப்படி ஏமாந்து உள்ளனர்.  சுமார் 300 கோடி ரூபாய் மக்கள்  ஏமாந்திருப்பார்கள் என தெரிகிறது. தீபாவளி தினத்தில் புதிய நகை போடலாம். பணத்தை வாங்கி   சொத்து வாங்கலாம் என நினைத்து போனவர்களுக்கு எல்லாம் பிரணவ் ஜூல்லர்ஸ் புஸ்ஸ் வாணம் கொடுத்துவிட்டது. உரிமையாளர் தலைமறைவாகி விட்டார்.  அவரை தேடும் பணி ஒருபுறம் நடக்கிறது.

பிரணவ் ஜூவல்லர்ஸ்  அதிபர் மதன் செல்வராஜ் தொடக்கத்தில் பெரிய  செல்வந்தர் இல்லை. இவரது தந்தை  திருச்சி சின்னகம்மாளத்தெருவில்  வெள்ளி நகைகள்  பாலிஷ் செய்வது போன்ற வேலைகளை செய்து சிறிது சிறிதாக சம்பாதித்தார்.  நகை தொழில் குறித்து தந்தையிடம் பாடம் படித்த  மதன் செல்வராஜ்  நகைகடைகளை ஆரம்பித்து கோடிகோடியாக அள்ளினார்.  இப்போது  பூட்டி கிடக்கும் இவரது  கடைகளில் நகைகள் இருக்குமா என்பதும் தெரியவில்லை. அத்தனையைும் சுருட்டிக்கொண்டு அவர் வெளிநாட்டுக்கு தப்பி விட்டாரா, அல்லது வெளிமாநிலத்தில் பதுங்கி உள்ளாரா   என போலீசார் தேடி வருகிறார்கள்.

இவர் பணத்தை எங்கே இழந்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவர் சிக்கினால்  மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!