Skip to content
Home » இன்று பத்திரிகை சுதந்திர நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இன்று பத்திரிகை சுதந்திர நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  இன்று உலகப் பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு  முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  1992-ல் வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியிட்ட அறிக்கையின் நினைவாக, மே 3-ம் நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுப்பேரவை ‘உலகப் பத்திரிகை சுதந்திர நாள்’-ஆக 1993-ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. இந்நாள் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வளர்க்கப் பயன்படுகிறது.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் முழு அளவில் பேணப்படுகிறது. 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற வேளையில் உலகம் முழுதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக் காலத்தில் தமிழ்நாட்டில் செய்தி சேகரிப்பதில் அச்சமின்றி இரவும் பகலும் பாடுபட்ட செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துப் பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டன. கொரோனா சிறப்பு ஊக்கத் தொகையை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது. கொரோனா இழப்பீட்டுத் தொகை ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கியது.

 

பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு 3.223 நபர்கள் உறுப்பினர்களாகச் சேர்ப்பு. பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,000 ஆகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.5.000 லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இயற்கை எய்திடும் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவித் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்ந்துள்ளது.சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய ‘கலைஞர் எழுதுகோல் விருது’ ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக இவ்வாண்டு மட்டும் கூடுதலாக ஒரு பெண் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுவரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

பத்திரிகையாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம்கள் எனப் பத்திரிகையாளர்கள், செய்தி ஊடகவியலாளர்கள் திராவிட மாடல் அரசினால் பாதுகாக்கப்பட்டு போற்றப்படும் வேளையில் கடைப்பிடிக்கப்படும் உலக பத்திரிகை சுதந்திர நாளில் திராவிட மாடல் அரசின் சார்பில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!