ராமநாதபுரம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் முனீசுவரன் (24). இவர் நேற்று முன்தினம் வண்ணார் ஊருணி அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் முனீசுவரனை வழிமறித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, செல்போனை பறித்துவிட்டு சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜெமினிராஜ், விக்னேஷ் ஆகிய இருவரை ராமநாதபுரம் நகர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ஜெமினிராஜ், சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக அங்கு கீழே கிடந்த சில குண்டூசிகளை எடுத்து விழுங்கினார்.
இதைக்கண்ட போலீசார் உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
