தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தஞ்சை தபால் நிலையம் எதிரே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பின்னர் சங்கத்தின் தலைவர் பழனியப்பன் கூறுகையில் தமிழக முதல்வர்
அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் கடன் பெற்ற விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். ஆனால், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல குளறுபடி வேலைகள் கடன் தள்ளுபடியில் நடந்துள்ளது. விவசாயிகளின் கடும் போராட்டத்தினால், 50,000 வரை தள்ளுபடி என்று சொன்னார்கள். இப்பொழுது மீண்டும் போராட்டம் நடத்தியதின் விளைவாக 75,000 வரை தள்ளுபடி என்று சொன்னார்கள். இதனை விவசாயிகள் அனைவரும் ஏற்கவில்லை. அவர் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுகின்ற வகையில் 5 ஏக்கர் கடன் பெற்ற விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதேபோன்று, மேகதாதுவில் அணை கட்ட துடிக்கின்ற கர்நாடக அரசை வன்மையாக கண்டித்து, அந்த ஆளுங்கட்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸைச் சார்ந்த அமைச்சர்களை மேகதாதுவில் அணை கட்ட துடிப்பார்கள்ேயானால் அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். அதேபோன்று, மகாராஷ்டிர அரசு எந்தவிதமான நிபந்தனையும் இன்றி 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்துள்ளது. அதற்கு ஒரு ஆர்பிஐ, தமிழ்நாட்டுக்கு ஒரு ஆர்பிஐ கிடையாது. மொத்தமாக இந்தியா முழுவதும் ஒரே ஆர்பிஐ தான். அதனைப் பின்பற்றி விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதேபோன்று, முல்லைப் பெரியாறில் 148 அடி வரை தண்ணீர் உயர்த்துவதற்கு அங்குள்ள காங்கிரஸ் அரசிடம் பேசி அதற்கு உண்டான ஆவண வேலைகளை முதலமைச்சர் அவர்கள் பார்க்க வேண்டும். அதேபோன்று, தற்போது தமிழ்நாட்டில் அனைத்து வேளாண் விற்பனை நிலையங்களிலும் விதை நெல் உள்ளது. அதற்கு இன்று வரை மானியம் வழங்கப்படாததால் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கவில்லை. உடனடியாக அந்த விதை நெல்லுக்கு மானியம் வழங்கி, விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்க வேண்டும். ஏறியிருக்கின்ற உர விலையினை மத்திய அரசிடம் பேசி உடனடியாக உர விலையை குறைக்க வேண்டும்.
அதேபோன்று, 1961-இல் போட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை எப்படி மோடி அவர்கள் ரத்து செய்தார்களோ, அதேபோல நமது கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்து இங்குள்ள தமிழக மீனவர் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று இந்த போராட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.
