ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததால், மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஜெயங்கொண்டம் – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதிகாரிகள் நேரில் வந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
பின்னர், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, காத்திருந்த வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
