புரட்டாசி மாதம் விரதம் எதிரொலியாக மட்டன், சிக்கன், மீன் விற்பனை குறைந்தது. இதே போல தக்காளி, பட்டானி விலை திடீரென அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் ரூ.100, பீன்ஸ் ரூ.90, முருங்கை ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது.புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள், விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இதுபோன்ற காரணங்களால் புரட்டாசி மாதத்தில் மீன், கோழி-ஆட்டு இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவுகளை ஒதுக்கிவைக்கவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அந்தவகையில் புரட்டாசி மாதத்தையொட்டி மீன் மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் வரத்து குறைவு போன்ற காரணங்களால் சில காய்கறிகளின் விலை தற்போது உயர்ந்துள்ளது. சில காய்கறி விலை குறைந்துள்ளது. அதன்படி சமையலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தக்காளி விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. அதாவது தக்காளி(முதல் தரம்) கிலோ ரூ.40 ஆகவும், தக்காளி(இரண்டாம் தரம்) ரூ.35, தக்காளி(மூன்றாம் தரம்) ரூ.30க்கும் விற்பனையானது. பட்டாணி ரூ.50லிருந்து ரூ.80, 90 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும் வெங்காயம்(முதல் தரம்) ஒரு கிலோ ரூ.2 குறைந்து ரூ.54க்கும், இரண்டாம் தரம் ரூ.50க்கும், கர்நாடகா வெங்காயம்(முதல் தரம்) ரூ.4 குறைந்து ரூ.42க்கும், வெங்காயம்(2ம் தரம்) ரூ.40 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.5 குறைந்து, கிலோ ரூ.30, ரூ.15 என்று தரத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி கேரட் ரூ.10 குறைந்து ரூ.35, ரூ.30, ரூ.20 ஆகவும், மலூர் கேரட் ரூ.20, ரூ.15க்கும், பீன்ஸ் விலை ரூ.10 குறைந்து ரூ.90, ரூ.80, ரூ.70, வெண்டைக்காய் ரூ.5 குறைந்து ரூ.20, ரூ.15க்கும், உஜாலா கத்திரிக்காய் ரூ.5 சரிந்து ரூ.30, ரூ.25க்கும், வரி கத்திரிக்காய் ரூ.30, ரூ.25க்கும் விற்பனையாகிறது. இதே போல புடலங்காய் ரூ.10 குறைந்து ரூ.25, ரூ.20க்கும், எலுமிச்சை ரூ.20 குறைந்து ரூ.200, ரூ.180க்கும், கொத்தமல்லி மற்றும் புதினா தலா ரூ.1 குறைந்து ரூ.6 மற்றும் ரூ.8 ஆகவும், பொள்ளாச்சி தேங்காய் மற்றும் உடுமலைப்பேட்டை தேங்காய் தலா ரூ.2 குறைந்து ரூ.54, ரூ.50 ஆகவும் விற்பனையானது. இதே ேபால சின்ன வெங்காயம் ரூ.100, ரூ.80, ரூ.70 ஆகவும், ஊட்டி பீட்ரூட் ரூ.50, ரூ.40 ஆகவும், கர்நாடகா பீட்ரூட் ரூ.30, ரூ.25க்கும், சவ்சவ் ரூ.33, ரூ.25க்கும், முள்ளங்கி ரூ.30, ரூ.25, முட்டைக்கோஸ் ரூ.25, ரூ.20, பாகற்காய் ரூ.50, 40க்கும், சுரைக்காய் ரூ.25, ரூ.15 என்றும், முருங்கைக்காய் ரூ.40, ரூ.30 ஆகவும், காலிபிளவர் ரூ.25, ரூ.20 ஆகவும், வெள்ளரிக்காய் ரூ.40, பச்சை மிளகாய் ரூ.60க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே போல பூண்டு ஒரு கிலோ ரூ.250, குடைமிளகாய் ரூ.100, இஞ்சி ரூ.160, ரூ.150, ரூ.80 என்றும், பூண்டு ரூ.250, ரூ.150, ரூ.130 ரூபாய், அவரைக்காய் ரூ.80, ரூ.70 ஆகவும், மஞ்சள் பூசணி ரூ.25, 20 என்றும், வெள்ளைப்பூசணி ரூ.25க்கும் விற்கப்படுகிறது. பீர்க்கங்காய் ரூ.50, ரூ.40க்கும், கொத்தவரங்காய் ரூ.30, ரூ.25, வாழைக்காய் ரூ.10, ரூ.8 ரூபாய், வாழைத்தண்டு ரூ.35, ரூ.30க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை மொத்த மார்க்கெட்டில் தான். இதனை சில்லறை கடைகளில் விற்கப்படும் போது கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை ஏரியாவிற்கு தகுந்தார் போல் விலை அதிகரித்து விற்கப்பட்டு வருகிறது.
