“மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை” – கோவை குற்றாலத்தில் சீறிப்பாயும் வெள்ளம்: சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்!
சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறை அதிரடி உத்தரவு!
கோவை மாவட்டம், சாடிவயல் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை குற்றாலம் (Kovai Kutralam) அருவிப் பகுதியில் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு

ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று (07/10/2026) முதல் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாகக் கோவை வனக்கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது.
மலைப் பகுதியில் பெய்து வரும் இந்த அதிரடி மழையின் காரணமாக, சிறுவாணி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு வழக்கத்தை விடப் பலமடங்கு அதிகரித்துக் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து உள்ளது.
அருவியில் நீர்வரத்து மிகவும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சீறிப்பாய்ந்து வருவதால், அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு வனத்துறை இக்கட்டுப்பாட்டை விதித்து உள்ளது.
இது குறித்துக் கோவை வனக்கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
”மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (07/10/2026) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது,” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீர்வரத்து சீராகி, மழை குறைந்த பிறகே சூழல் சுற்றுலா மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் எனப் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
எனவே, இன்று கோவை குற்றாலத்திற்கு வரத் திட்டமிட்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
