காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்தடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று முன்திம்ன அங்குள்ள ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். துறவி, அறிஞர், சமூக – மத சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவா, அசாம் கலாச்சாரம், மத வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அறியப்படுகிறார். ஆனால், அந்தக் கோயிலுக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஒரே நாளில் ராமர் கோயில் திறப்பு, ராகுல் யாத்திரை என இரண்டு நிகழ்வுகள் நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனக் காரணம் கூறப்பட்டு ராகுலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ராகுல் தொண்டர்களுடன் தர்ணா மேற்கொண்டார், இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நேற்று அசாம் தலைநகர் குவாஹாட்டிக்குள் நுழைய முயன்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் காந்தி குவாஹாட்டியின் பிரதான பகுதிகள் வழியாக யாத்திரையை மேற்கொள்ளாமல் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும் என்று கூறி யாத்திரை தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி யாத்திரை திட்டமிட்ட பாதையில் நடக்கவில்லை என்று அசாம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணத்துக்காக தடுக்கப்படுவதாக போலீசார் கூறியிருப்பது காங்கிரஸ் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..