Skip to content
Home » மணிப்பூர் கலவரபூமியில் ராகுல்…. முகாம்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஆறுதல்

மணிப்பூர் கலவரபூமியில் ராகுல்…. முகாம்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஆறுதல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.  வீடுகள், தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள்னர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூரில் 2 நாள் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.   இதற்காக அவர் நேற்று தலைநகர் இம்பாலுக்கு வந்தார். அங்கிருந்து அவர் கலவரம் பாதித்த சுரக்சந்த்பூருக்கு சாலை வழியாக புறப்பட்டார். அவர் வாகன அணிவகுப்புடன் சென்று கொண்டிருந்தபோது, இம்பாலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பிஷ்ணுப்பூர் என்ற இடத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் அங்கு பல மணி நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் பெருமளவில் திரண்டு வந்து ராகுல் காந்தி ஜிந்தாபாத் என கோஷமிட்டு அவரை அனுமதிக்கும்படி போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சுரக்சந்த்பூர் சென்று அங்கு ஒரு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அவர்கள் கூறியதை அவர் கவனமுடன் கேட்டதுடன் அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். அங்குள்ள குழந்தைகளோடு அவர் மதிய உணவு சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது.

இன்று 2-வது நாளாக மொய்ராங்கில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள  மக்களை  நேரில் சென்று ராகுல் காந்தி  சந்தித்து ஆறுதல் கூறினார். கலவரம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்களை ராகுல் சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “மணிப்பூருக்கு அமைதி தேவை. இங்கு அமைதி திரும்ப வேண்டும். சில நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களை சந்தித்து பேசினேன், இந்த நிவாரண முகாம்களில் குறைபாடுகள் உள்ளன, இதனை அரசு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!