உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1041-வது சதயவிழாவை முன்னிட்டு நேற்று அரசு மற்றும் 138 அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1041- வது சதய விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. தொடர்ந்து கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற ஊர்வலம், கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையடுத்து சதய விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை திருக்கோயிலில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. பின்னர், திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் கோயிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து தமிழக அரசு சார்பில், கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்எல்ஏ ஆர்.விஜய்சரவணன், மாவட்ட ஆட்சியர் ஆர்.ரேவதி, மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழா குழு தலைவர் என்.எஸ்.சரவணன், அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், துணை ஆணையர் கோ.கவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர், தமிழ் அமைப்புகள் என 138 அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 48 வகையான மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு பெரியநாயகி மற்றும் பெருவுடையார், மாமன்னன் ராஜராஜசோழன், பட்டத்தரசி லோகமாதேவி, ராஜேந்திர சோழனின் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து மாலை கருத்தரங்கம், மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், சதய விழாக்குழு, அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து செந்திருந்தனர்.
