Skip to content
Home » ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

  • by Senthil

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறைண்டனை, ₹20,500 அபராதமும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதற்கான குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ₹500 அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மார்ச் மாதத்திற்குள் மேல்முறையீட்டு வழக்கை முடித்திட உத்தரவிட்டனர்.இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை.

அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். தொடர்ந்து நீதிபதி, மேல்முறையீட்டு வழக்கில் வாதாடுவதற்கு பலமுறை வாய்ப்பு அளித்தும் முன்வராத நிலையில் இறுதிவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், இன்றைக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கண்டிப்பாக நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டுமென கூறிய நீதிபதி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கில் இன்று ராஜேஸ் தாஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது மேல்முறையீட்டு வழக்கில் வாதங்களை முன்வைக்க ராஜேஷ் தாஸ் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பூர்ணிமா, ராஜேஷ் தாஸ் தரப்பில் வாதிட ஜனவரி 31ம் தேதி கடைசி வாய்ப்பு என்றும் 31ம் தேதி வாதிடவில்லை என்றால் பிப்ரவரி 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 31ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!