Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்- ராமதாஸ் வேண்டுகோள

அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம், 18 தொகுதியிலும் அவர்கள் தோற்க வேண்டும்  என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது, “தற்போதைய தேர்தலில் போட்டியிடும் அன்புமணி தலைமையிலான அணி, மக்கள் சேவைக்காக அன்றி, அதிகாரம் கிடைத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நான் வளர்த்தெடுத்த பிள்ளைகள் இன்று பணத்திற்காக அணி மாறி, கொள்கையற்ற துரோகக் கூட்டத்தில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. அதிகாரம் இருந்தால் தான் சேவை செய்ய முடியும் என்பது உண்மை, ஆனால் இவர்கள் அந்த அதிகாரத்தைப் பணமாக்கும் கலைக்காகவே பயன்படுத்த நினைக்கிறார்கள். மக்களின் குறைகளை நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ எதிரொலிக்க வேண்டும் என்பதே நான் அளித்த பயிற்சி. ஆனால், அன்புமணி அவர்கள் இந்தியாவிலேயே மிகக் குறைந்த நாட்களே நாடாளுமன்ற அவைகளுக்குச் சென்றவர் என்ற பதிவை வைத்துள்ளார். நேரடி மக்கள் களத்தைக் காண அஞ்சி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தனது மனைவியை நிறுத்திவிட்டு, இவர் பின்னணியில் இருந்து கொண்டு அதிகாரத்தைத் தேடுகிறார். 

அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட ரீதியிலும் அன்புமணி அவர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார். பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய தருணங்களில் கூட ஒரு மகனாகத் தன் கடமையைச் செய்யாதவர் அவர். குறிப்பாக, அண்மையில் நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேலம் மருத்துவமனையில் உயிருக்குப்போராடிய நிலையில், ஒரு வார்த்தை கூட நலம் விசாரிக்க வராதவர் அன்புமணி. இது அவரது குணாதிசயத்தையும், துரோக மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. அன்புமணியின் தலைமையிலான இந்தக் கும்பல் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவர்கள் சட்டமன்றத்திற்குச் சென்றால் மக்களின் பிரச்சினைகளுக்காகப் பேசப்போவதில்லை. மாறாகத் தங்களுக்குத் தெரிந்த பணம் பண்ணும் வித்தையைத் தான் காட்டப்போகிறார்கள். எனவே, வாக்காளர் பெருமக்கள் இந்தத் துரோகக் கும்பலை நிராகரித்து, உண்மையாக உங்களுக்குச் சேவை செய்யும் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!