Skip to content
Home » ராமஜெயம் கொலை வழக்கு…. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது எப்படி?

ராமஜெயம் கொலை வழக்கு…. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது எப்படி?

அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில்  கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை  நடந்து 11 வருடங்கள் ஆன நிலையிலும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக  உள்ளூர் போலீசார் சிபிசிஐடி, சிபிஐ என மாறி மாறி விசாரணை நடத்திய பிறகும் துப்புதுலங்கவில்லை. இப்போது சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 13 ரவுடிகளை  தேர்வு செய்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி கோர்ட்டில் அனுமதி கேட்டனர். அப்போது சண்முகம் என்பவர்  மட்டும் தனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கூடாதுஎன  எதிர்ப்பு தெரிவித்தார். மற்ற 12 பேரும் சம்மதித்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள போலீஸ் தடயவியல் கூடத்தில்  மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ் ஆகிய 4 பேரிடம்  உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக டில்லியில் இருந்து  உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் நிபுணர் மோசஸ் மற்றும் ஒருவர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள்  இந்த சோதனையை நடத்தினர். அப்போது எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் சோதனை நடத்தப்படும் நபரின் வக்கீல் ஆகியோரும் உடனிருந்தனர்.

நேற்று 3 பேருக்கு மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. சத்யராஜ்க்கு சோதனை நடத்த போதுமான நேரம் இல்லாததால்  அவரை இன்றைய சோதனைக்கு வரும்படி கூறிவிட்டனர். எனவே இன்று முதலில் சத்யராஜ்க்கு சோதனை நடத்தப்பட்டது.

இது தவிர இன்று செந்தில், திலீப்,  கலைவாணன் ஆகியோருக்கும் சோதனை நடத்தப்படும். நேரம் இருந்தால்  சுரேந்தர் என்பவருக்கும் சோதனை நடைபெறும்.

நேற்று இவர்களுக்கு என்ன விதமான சோதனை நடந்தது என்பது தெரியவந்துள்ளது.இவர்களது உடலில் சில கருவிகளை பொருத்தி வைத்து விட்டு அவர்களிடம் தலா 12 கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். ஒவ்வொரு கேள்விக்கும் 20 வினாடி இடைவெளி விட்டு இந்த கேள்விகளை கேட்டனர்.

உனக்கு பேட்மிண்டன் விளையாட தெரியுமா. ராமஜெயத்தை உனக்கு தெரியுமா, அவர் கொலை செய்யப்பட்ட தினத்தில் நீ எங்கே இருந்தாய், ராமஜெயம் கையில் அணிந்திருந்த மோதிரத்தை எடுத்து சென்றது யார்,  நீ என்ன படித்திருக்கிறாய் என்பன போன்ற கேள்விகள் இடம் பெற்றது.  இப்படி 12 கேள்விகள் கேட்டு முடிந்ததும்  5 நிமிடம் இடைவெளி விடப்படும்.

பின்னர் மீண்டும் அதே 12 கேள்விகளை  வரிசை மாற்றி, முன்னால் கேட்ட கேள்விகளை பின்னால் கேட்டார்கள். இப்படி மாற்றி மாற்றி  ஒவ்வொருவரிடமும் 6 முறை கேள்விகள் கேட்டகப்பட்டன. இந்த கேள்விகள் கேட்கப்படும்போதும், அதற்கு சம்பந்தப்பட்ட நபர் பதில் அளிக்கும்போதும் அவரது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் பதிவாகும்.

குறிப்பாக ஒருவர் உண்மை பேசும்போது அவரது மனநிலை ஒருமாதிரியாக இருக்கும். பொய் சொல்லும்போது சற்று பரபரப்பு, பதற்றம் ஏற்படுவது இயற்கை. எனவே சோதிக்கப்படும் நபரின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்  அங்குள்ள கருவியில் பதிவாகும்.இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர் உண்மை பேசுகிறாரா, பொய் சொல்கிறாரா என கண்டறிய முடியும்.  இந்த சோதனையின் முடிவுகள் குறித்து போலீசார் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

இந்த சோதனையின்போது உடனிருந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் கூறியதாவது:  போலீசார் நடத்தும் உண்மை கண்டறியும் சோதனையில் 1% கூட உண்மையை கண்டறிய முடியாது.  அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டால் யாராலும் உடனடியாக சரியான பதில் சொல்ல முடியாது. மனம் பதற்றமடையும்.  எனவே இந்த சோதனை என்பது போலீசார் நடத்தும் கண்துடைப்பு  நாடகம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!