Skip to content
Home » ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா சாமிதரிசனம்…

ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா சாமிதரிசனம்…

  • by Senthil

`என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்’ என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 168 நாட்கள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பயணம் நடைபெற உள்ளது.

இந்த நடைபயண தொடக்க விழா நேற்று மாலையில் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது. மத்திய

உள்துறை மந்திரி அமித்ஷா, விழாவில் கலந்து கொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு ராமேசுவரத்தில் ஓட்டல் ஒன்றில் அமித்ஷா, அண்ணாமலை தங்கினர்.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ராமேசுவரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதிகாலை 5.30 மணிளவில் ராமநாதசாமி கோவிலுக்கு சென்ற அமித்ஷா அங்கு சாமி தரிசனம் செய்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்பட பலரும் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு ஏரகாடு கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டிற்கு அமித்ஷா செல்கிறார். பின்னர், மீண்டும் ஓட்டலுக்கு திரும்பும் அமித்ஷா, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்து எழுதப்பட்ட, “கலாம்

நினைவுகள் இறப்பதில்லை” என்ற புத்தகத்தை வெளியிடுகிறார்.

மதியம் 12 மணி அளவில் அப்துல் கலாம் வீட்டுக்கு சென்று கலாமின் குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். 12.45 மணிக்கு பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபத்தை அமித்ஷா பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் வந்து, தனி விமானத்தில் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

அமித்ஷா வருகையையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும், மதுரை விமான நிலையம் பகுதியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!