Skip to content
Home » ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

  • by Senthil
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
“தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு 2006 ம் ஆண்டு ஏப்ரலில் மாதம் ஒன்றிற்கு 59,852 கிலோ லிட்டராக இருந்தது. இந்த ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு 1.4.2021 முதல் மாதம் ஒன்றிற்கு 7536 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீண்டும் 1.4.2022 முதல் அதுவும் குறைக்கப்பட்டு மாதம் ஒன்றிற்கு 4520 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1.4.2023 முதல் அதுவும் குறைக்கப்பட்டு தற்போது மாதம் ஒன்றிற்கு 2712 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதற்கு தமிழ்நாட்டில் எரிவாயு இணைப்பு அதிகமாக இருப்பதால் ஒதுக்கீடு குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி பதில் கடிதம் எழுதியிருந்தார்.

மீண்டும் 29.3.2023 அன்று ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப்சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்குப் பதில் எதிர்நோக்கப்படுகிறது.

மண்ணெண்ணெய்க்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானியம் முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றாலும் ஒதுக்கீடு செய்வது ஒன்றிய அரசாக இருப்பதால் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம்தான் கோரிக்கை வைக்க இயலும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று  டில்லி  சென்று ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த கோரிக்கை வைக்கப்படும்.

அதேபோன்று தமிழ்நாட்டிற்கான ஒன்றிய அரசின் கோதுமை ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஜுலை 2020 வரை மாதம்தோறும் 13,485 மெ.டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இது உயர்த்தப்பட்டு ஆகஸ்ட் 2020 முதல் மே 2022 வரை மாதம் 30,647 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் ஜுன் 2022 முதல் தமிழ்நாட்டிற்கான கோதுமையின் ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு தற்போது மாதம் ஒன்றிற்கு 8532 மெ.டன் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி 23,532 மெட்ரிக் டன் வழங்கிட ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் அதிகம் பேர் மண்ணெண்ணெய் வைத்துதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். அதே மாதிரி கடந்த காலத்தில் எல்லாம் மாநகராட்சிக்கு இவ்வளவு ஒதுக்கீடு, நகராட்சிக்கு, பேரூராட்சிக்கு கொடைக்கானல், ஏற்காடு மலை, ஊட்டி போன்ற பகுதிகளுக்கெல்லாம் இவ்வளவு இவ்வளவு ஒதுக்கீடு என்று ஏற்கனவே ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த ஒதுக்கீடெல்லாம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.

எனவே, மண்ணெண்ணெய் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் பருப்பு, ஆயில், இப்போது சர்க்கரை எல்லாம் நாங்கள் வாங்குவது போன்று, வாங்கி பொதுமக்களுக்கு எத்தனை லிட்டர் தேவையோ அத்தனை லிட்டர் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒன்றிய அரசு அனுமதி வழங்கினால்தான் மண்ணெண்ணெயைக் கொடுக்க முடியும். ஏனென்றால் பெட்ரோலாக இருந்தாலும் சரி, டீசலாக இருந்தாலும் சரி, மண்ணெண்ணெயாக இருந்தாலும் சரி, எரிவாயு இணைப்பாக இருந்தாலும் சரி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால், இன்றைக்குப் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!