ஆடு திருடியதாகக் கூறி வியாபாரிக்கு அடி உதை: உயிருட்டு போராட்டம்
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஊரகரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 49). இவரது மனைவி கலாவதி (38). கந்தசாமி அதே பகுதியைச் சேர்ந்த ராமய்யா என்பவருடன் சேர்ந்து ஆடு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் 3 ஆடுகள் காணாமல் போயுள்ளன. இந்த ஆடுகளை கந்தசாமி திருடிச் சென்று, ராமய்யாவிடம் கொடுத்து சந்தையில் விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சசிகுமாருக்கும் ராமய்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
விஷயத்தை அறிந்த ராமய்யாவின் மகன்களான வினோத் (32) மற்றும் நவீன் (30) ஆகிய இருவரும் கடும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கந்தசாமியை ஊரகரை தேவாலயம் அருகே உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து, “எங்கள் தந்தையிடம் வந்து திருட்டு ஆடுகளைக் கொடுப்பாயா?” என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த மரக்கட்டையால் கந்தசாமியை சரமாரியாகத் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் கந்தசாமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு சேலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், தலையில் பலத்த காயமடைந்து மூளை ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கலாவதி அளித்த புகாரின் பேரில், தா.பேட்டை போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வினோத் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து; முதியவர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, அந்தரப்பட்டி அரிசிடவுன் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 70). இவர் தனது மிதிவண்டியுடன் முசிறி – தா.பேட்டை மாநில நெடுஞ்சாலையில் உள்ள கலப்பு காலனி அருகே சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே திசையில் நீலியம்பட்டி, தலைமலை பகுதியை சேர்ந்த மணி (59) என்பவர் தனது ஸ்கூட்டரில் வேகமாக வந்துள்ளார். எதிர்பாராத விதமாக மணி ஓட்டி வந்த ஸ்கூட்டர், நின்று கொண்டிருந்த துரைசாமியின் மிதிவண்டி மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் இருவருமே தூக்கி வீசப்பட்டனர். இதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மிதிவண்டியில் இருந்த துரைசாமிக்கு இரண்டு முழங்கால்கள் மற்றும் இடது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணி திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த துரைசாமி முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில், முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு: செவிலியர் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா எட்டரை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கொன்னாச்சி (வயது 65). இவரது மகள் வேம்பு (23). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். வேம்பு வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது காதலை தந்தையிடம் கூறி, அந்த வாலிபரையே திருமணம் செய்து வைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
ஆனால், வேம்புவின் காதலுக்கு அவரது தந்தை கொன்னாச்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக வேம்பு மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வேம்பு மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து முதியவர் சாவு…
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா வெங்கடாசலபுரம் நேரு நகரைச் சேர்ந்தவர் செல்வமுத்து (76). இவரது மகன் பாலச்சந்திரன். செல்வமுத்து கடந்த 4 ஆண்டுகளாக வெங்கடாசலபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். வயது முதிர்ந்த காலத்தில் துணைக்கு யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்ததால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வமுத்து, நேற்று முன்தினம் வீட்டில் எலி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மகன் பாலசந்திரன் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
