கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் –தமிழக சட்டசபை கூட்ட தொடரில் தமிழக முதல்வர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதி மறுக்கபட்டதற்கு கண்டன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், கரூர் மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடைபெற்றது.
மாவட்டக் கழக அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமைத் தணிக்கைக்குழு உறுப்பினர் தி.அ.முகமது சகி, பெரம்பலூர் நகரக் கழகச் செயலாளர் எம்.பிரபாகரன் Ex.MLA ஆகிய தலைமைக் கழகப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினார்.
மேலும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு

உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிர்வாக சீரமைப்பு
கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் அறிவிப்பின்படியும், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கழக நிர்வாக சீரமைப்பு தீர்மானத்தின்படியும், கரூர் மாவட்டத்தில் பகுதி,

நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழகங்களை மறுசீரமைப்பு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், வயது வரம்பின் அடிப்படையில் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழக செயலாளர்களை மறுசீரமைப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
த.வெ.க. அரசுக்கு கண்டனம்
தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு முறையாக பதிலளிக்காமல், முதலமைச்சர் அவதூறாக பேசியதாகவும், அதற்கு பதிலளிக்க எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் கூறி, த.வெ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொய் வழக்குகள் – கண்டனம்
தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கேள்வி எழுப்பி வரும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல்துறை மூலம் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகக் கூறி, த.வெ.க. அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டித்தது.
அண்ணா, பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது எனவும், அதே நாளில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கழக முப்பெரும் விழாவில் கழக நிர்வாகிகள் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு, திருமாநிலையூர் ரவுண்டானாவில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
முப்பெரும் விழா விருதுகளுக்கு நன்றி
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா அவர்களுக்கும், அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ் அவர்களுக்கும், கலைஞர் விருது கழக துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திரு.சிவா எம்.பி. அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாவேந்தர் விருது கழக மருத்துவ அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு அவர்களுக்கும், பேராசிரியர் விருது தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பி அவர்களுக்கும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விருது இளைஞர் அணி துணைச் செயலாளர் நா.இளையராஜா அவர்களுக்கும், முரசொலி செல்வம் விருது கலைஞர் தொலைக்காட்சி செய்திப் பிரிவு தலைவர் மற்றும் எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகளை அறிவித்த கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கரூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
