Skip to content
Home » சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், ஒட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடித்திட வேண்டும். விபத்தில்லா பயணங்கள் மேற்கொள்ள சீரான வேகத்தில் பயணிக்க வேண்டும். பாதசாரிகள் சாலையின் இடது புறமாக எப்பொழுதும் சென்றிட வேண்டும். மேலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணியவேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவேண்டும். குடிபோதையில் வாகனத்தினை இயக்குதல் கூடாது, சிக்னல் விளக்கு மற்றும் சாலை குறியீடுகளை மதித்து நடக்கவேண்டும். பேருந்தில் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது. ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தினை இயக்ககூடாது. குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனங்களை முந்துதல் கூடாது.

மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிகொடுக்கவேண்டும். மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்ப கூடாது எனவும், சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் பின்பற்றி

விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை மாற்றிட அனைத்து ஒட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

இப்பேரணியானது அரியலூர் அண்ணாசிலை அருகிலிருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் காமராஜர் திடலில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள், டூவீலரில் 2 பேர் மட்டுமே செல்வோம், மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டவும், தலைக்கவசம் (ஹெல்மெட்) உயிர்கவசம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவ, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், அரியலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!