கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துரை பகுதியில், அமராவதி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு கடுமையாக

பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே இரண்டு முறை தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், அந்த தண்ணீர் கடைமடை பகுதிகளை சென்றடையவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
தற்போது அணையில் இருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அது தாராபுரம் பகுதியிலேயே நின்றுவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே, அமராவதி ஆற்றின் கடைமடை பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கான தண்ணீர் சென்றடையும் வகையில், குறைந்தபட்சம் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துரை பகுதியில் பெண்கள் காலி குடங்களை தலையில் ஏந்தியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காவிரி ஆற்றில் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதைப் போல, அமராவதி ஆற்றிலும் விவசாயிகளின் நலன் கருதி 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
