இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) சார்பில் ‘ஏஎஸ்ஐ அர்ஜூன்’ என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ ரயில் நிலையத்தில் ஏற்படும் தீ மற்றும் புகையைக் கண்டறிந்து பயணிகளை எச்சரிக்கும் திறன் கொண்டது. மேலும், ரயில் நிலையத்திற்கு வருபவர்களின் முகங்களை ஸ்கேன் செய்து, பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களைத் துல்லியமாக அடையாளம் காட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அர்ஜூன் ரோபோ தனது திறமையை நிரூபித்துள்ளது. நேற்று ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை இந்த ரோபோ அடையாளம் கண்டு, உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பியது.
அந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ரயில்வே போலீசார், அந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அடப்பா சிவா மற்றும் பங்காரு என்பதும், அவர்கள் மீது ஒடிசா மாநிலம் ராயகடா உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் வலம் வரும் இந்த ரோபோவின் செயல்திறனைப் பார்த்துப் பயணிகள் மட்டுமின்றி, போலீசாரும் ஆச்சரியமடைந்துள்ளனர். “இனி அர்ஜூன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது” என ரயில்வே பாதுகாப்புப் படையினர் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

