Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாய்களை ரோட்டில் விட்டால் இனி ரூ.10,000 அபராதம்.. மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், சென்னை மாநகராட்சியை சேர்ந்த அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளை பொது இடங்கள் மற்றும் சாலைகளிலும் கைவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளை பொது இடங்களில் கைவிடும் உரிமையாளர்களுக்கு ஆரம்பத்தில் ரூ.25,000 அபராதம் விதிக்க திட்டமிடப்பட்ட நிலையில், நிலைக்குழுக்களின் பரிந்துரையைத் தொடர்ந்து அபராதத் தொகையை ரூ.10,000 ஆக நிர்ணயித்து மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு ரூ.50 கட்டணம் செலுத்தி, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் ஆன்லைன் மூலம் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதைத் தடுக்க அவற்றின் உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்துவதும் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கடந்த ஜூலை 30, 2026 வரை சென்னையில் 78,238 செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், உரிமம் பெற்ற பல செல்லப்பிராணிகள் பொது இடங்களிலும் சாலைகளிலும் கைவிடப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக இனி சாலைகளில் கைவிடப்படும் நாய் அல்லது பூனைகள் கண்டறியப்பட்டால், அவற்றில் உள்ள மைக்ரோ சிப்-ஐ ‘ஸ்கேனர்’ மூலம் ஸ்கேன் செய்து, உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரியைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆணையர் குறிப்பில் ரூ.25,000 அபராதம் விதிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், பொது சுகாதாரம் மற்றும் வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு கூட்டங்களில் இது மிக அதிக தொகை என பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, அபராதத்தை ரூ.10,000 ஆக நிர்ணயித்து மாமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் மாநகராட்சியின் POS இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதத் தொகையை நேரடியாக வசூலிக்கவும் தீர்மானத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!