Skip to content
Home » ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

  • by Senthil

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று   கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க  சிறப்பு நிதியாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்தார்.  அதன் மூலம் பல்வேறு  சாலைப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டன.  மாநகராட்சி சார்பில் ரூ60 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இன்று புதிதாக 173 கி.மீ. தூர சாலைபணிகள் ரூ.71 னோடியில்  தொடங்கப்பட்டு உள்ளது.  இப்போது 260 கோடி ரூபாய் செயலவில் 578 கி.மீ.  சாலை சீரமைக்கப்படுகிறது.

இது தவிர கோவையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மார்க்கெட் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இன்று அந்த பணிகள்  தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர  நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.140 கோடியில்  36 கி.மீ.  தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதையும் சேர்த்து மொத்தம் ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டு614 கி.மீ. தூரம் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 1157 சாலை பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. இது முக்கால் வாசி பணிகள் முடிந்து விட்டது. 2 மாதத்தில் முழு பணியும் முடிவடையும்.

கேள்வி:  ஏற்கனவே மின்வெட்டு உள்ள நிலையில் அமித்ஷா வரும்போது மின்தடை ஏற்பட்டுள்ளதே?

அமைச்சர்: என்ன கேட்டீர்கள், ஏற்கனவே மின்வெட்டு இருக்கிறதா, எங்கே இருக்கிறதா, உங்கள் வீட்டில் எப்போதாவது மின் வெட்டு ஏற்பட்டதா?

நிருபர்:   ஓபிஎஸ் அறிக்கையில் கூறி உள்ளார்.

அமைச்சர்: ஓபிஎஸ் கூறி இருக்கிறார் என கேளுங்கள், ஓபிஎஸ் எங்கே இருக்கிறார். அவர் வீட்டில் மின்வெட்டு வந்ததா, தோட்டத்தில் மின்வெட்டு வந்ததா, அவரது விவசாய நிலத்தில் மின்வெட்டு வந்ததா,  அரசியல் காழ்ப்புணர்ச்சி, வன்மத்தால் எதையாவது சொல்வார்கள். அதை பத்திரிகையாளர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். நான் உங்களை சொல்லவில்லை. கோவையிலாகட்டும், சென்னையிலாகட்டும்  நான் எல்லா கேள்விக்கும் பதில் சொல்கிறேன் என்பதற்காக   எல்லாவற்றையும் கேட்டுவிடக்கூடாது. அதில் உண்மை இருக்கிறதா என நீங்கள் பார்க்க வேண்டும்.

சென்னையில் அமித்ஷா வரும்போது ஏற்பட்டது துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது. அதனை 40 நிமிடத்தில் சரிசெய்து விட்டோம்.

இதுபோலத்தான் அன்புமணி ராமதாஸ்,  டாஸ்மாக்கில் ரூ.2 லட்சம் கோடி  இழப்பு, வரி ஏய்ப்பு என்று பேட்டி கொடுத்து உள்ளார். அதுவும் சில பத்திரிகைகளில், ஊடகங்களில் வந்து உள்ளது.  டாஸ்மாக்கின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.45ஆயிரம் கோடி. 2 வருடத்தில் 83 ஆயிரம் கோடி ரூபாய் தான் வருமானம்.

83ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தில் எப்படி 2 லட்சம் கோடி வரி ஏய்ப்பு நடக்கும் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஆனால் யாரும் அதை கேட்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்காக  அரசியல்வாதிகள்  எதையாவது சொல்வார்கள்.

இதற்கு முன் உங்கள் கூட்டணி ஆட்சி நடந்ததே அப்போது டாஸ்மாக் வருமானம் என்ன, அதைவிட இப்போது கூடி இருக்கிறதா, குறைந்திருக்கிறதா என பத்திரிகையாளர்கள் அன்புமணியிடம் கேட்டிருக்க வேண்டும்.

கிருஷ்ணசாமி போன்றவர்கள்  நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் பெறுவதற்காக எதையவாது சொல்வார்கள்.  இந்த அரசை பொறுத்தவரை மக்கள் பிரச்னைக்காக, மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை, குற்றச்சாட்டுகளை சாதாரண பொதுமக்கள் சொன்னாலும், நீங்கள் சொன்னாலும், அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவோம்.  அரசியல் காரணங்களுக்காக    அரசியல்வாதிகள் சொல்லும்  குற்றச்சாட்டுக்களைப்பற்றி கவலையில்லை.

நிருபர்: உங்கள் வீட்டில் வருமானவரி சோதனை….

அமைச்சர்: என் வீட்டில் வருமான வரி சோதனையை நடக்கவில்லை. நீங்கள் புதுசா  ஏதாவது  கேட்காதீர்கள்.

நிருபர்: உங்கள் உறவினர் வீட்டில் வருமானவரி சோதனை….

அமைச்சர்:  வருமான வரி சோதனையின்போது அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது.  அவர்கள் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டது. இன்னும் கூடுதலாக கேட்டாலும் கொடுக்க தயார்.

சென்னை  விமான நிலையத்தில் நடந்த மின்தடை  எதிர்பாராமல் நடந்த பழுது. இதில் அரசியல் செய்யலாம் என கருதும் அந்த கட்சியினரின்  கருத்து இந்த திராவிட மாடல் மண்ணில் ஒருபோதும் எடுபடாது.

கோவையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேயர், ஆணையர் தலைமையில் தொடங்கப்பட உள்ளது.  கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டு பாதிப்பு இருக்காது.  கோவை அண்ணா மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!