சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில முன்னாள் செயலாளருமான என். சங்கரய்யா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102. அவர் சளி, இருமல், காய்ச்சல், உள்ளிட்ட பாதிப்புகளால் நேற்று சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி காலமாகி விட்டார்.
தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆஸ்பத்திரிக்கு சென்று சங்கரய்யா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தா. மோ. அன்பரசன், சேகர்பாபு, பொன்முடி ஆகியோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டாக்டர் ராமதாஸ், சீமான், மற்றும் அனைத்து கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சங்கரய்யா மறைவையொட்டி கம்யூனிஸ்ட் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. காலை 11 மணி அளவில் சங்கரய்யா உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துசெல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாளை உடல் நல்லடக்கம் நாளை நடக்கிறது.
சங்கரய்யா தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர். இவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி படிப்பு தடை பட்டது. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. அதை ஏற்க தமிழக கவர்னர் ரவி மறுத்து விட்டார். முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தும் கவர்னர் ரவி, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்து விட்டார். இன்று அந்த தியாகி சங்கரய்யா காலமாகி விட்டார். இதனால் தமிழ் மக்கள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.