Skip to content
Home » சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

  • by Senthil

‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக,  இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில்  மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, கழக மூத்த முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் பொற்கிழி வழங்குவது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது… இந்த மூன்று விஷயங்களை மையமாகக் கொண்டே என் சமீபகால மாவட்டச் சுற்றுப்பயணங்களை அமைத்துக்கொள்கிறேன்.

இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.

கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.

இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.

சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.

நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.

இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.

 

நன்றி, வணக்கம்.

 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!