கோவை மாநகராட்சிப் பகுதிகளில் காலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் அலட்சியப் போக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில், நாள்தோறும் காலையிலேயே வீடுகள் தோறும் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் வாகனங்கள் இயங்க வேண்டும். இதற்காகக் காலை 6:30

மணிக்கே அந்தந்த வார்டுகளுக்குள் வண்டிகள் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால், குப்பை சேகரிக்கும் வாகனங்களை இயக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக, காலை 7:30 மணி வரை வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதற்காகவே வண்டிகள் வரிசையில் காத்து இருக்கும் அவல நிலை நீடிக்கிறது.
காலையிலேயே பணிக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் குப்பைகளைக் கொட்டுவதற்குள் வண்டிகள்

வராததால், கழிவுகளை வெளியே கொட்ட முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும், தாமதமாக வரும் வண்டிகளால் மாநகரின் முக்கியச் சாலைகளில் குப்பைகள் தேங்கும் சூழ்நிலையும் உருவாகிறது.
மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கவனத்திற்கு இந்த முறைகேடுகளும் தாமதங்களும் கொண்டு செல்லப்படுவதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, கோவை மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக தலையிட்டு, ஒப்பந்த நிறுவனத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கேள்வி கேட்க வேண்டும் என்றும், காலை 6:30 மணிக்கே வார்டுகளுக்குள் குப்பை வாகனங்கள் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
