மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் அருகே 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்.
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தினந்தோறும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட தினக்கூலியான 760 ரூபாய்க்கு

பதிலாக தங்களுக்கு 521 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால்,இந்த மாதமும் தங்களுக்கு 521 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டிய தூய்மை பணியாளர்கள், இன்று காலை மீண்டும் பணிகளை புறக்கணித்து கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்த்தப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், பணிக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், அதிகப்படியான பணி சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், ஒப்பந்த நிறுவனம் மூலமாக இல்லாமல் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்றும், வாரத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
காலை மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் ஆறு கிலோமீட்டர் ஊர்வலமாக நடந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து முறையிட்டனர்
மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் தற்போது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் சாலை ஓரத்தில் அமர்ந்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி வருகின்றனர்.
போலீசார் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி பேரிக்காடுகள் வைத்து அடைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்களின் தொடர் பணி புறக்கணிப்பு காரணமாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
