Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருக்கல்யாண “தேங்காய்” ரூ.2.55 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பெண்

திருக்கல்யாண "தேங்காய்" ரூ.2.55 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பெண்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்வின் நிறைவாக, திருமாங்கல்யம் சுற்றி வைக்கப்பட்ட தேங்காய் ஏலத்திற்கு விடப்பட்டது.

முதற்கட்டமாக ரூ.11 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம், பக்தர்களின் ஆர்வத்தால் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பலரும் போட்டிபோட்டு ஏலம் கேட்ட நிலையில், மதுரை மாவட்டம் அருகே உள்ள செல்லம்பட்டியைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண், இறுதியாக ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு தேங்காயை ஏலம் எடுத்தார்.

திருக்கல்யாண நிகழ்வில் திருமாங்கல்யம் சுற்றி வைக்கப்பட்ட தேங்காயை ஏலம் எடுத்தால் முருகப்பெருமானின் அருளும், குடும்பத்தில் நலமும் வளமும் பெருகும் என்ற பக்தர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஏலம் நடைபெற்றது.

ரூ.11 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் ரூ.2.55 லட்சம் வரை உயர்ந்தது அப்பகுதி பக்தர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

error: Content is protected !!