Skip to content
Home » அடுத்த ஷிண்டே ஆகிறார் சரத்பவார்…இந்தியா கூட்டணியை உடைக்க சதி

அடுத்த ஷிண்டே ஆகிறார் சரத்பவார்…இந்தியா கூட்டணியை உடைக்க சதி

மும்பையில் எதிர்கட்சி தலைவர்களின் ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம் வரும் 31மற்றும்  செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ‘இந்தியா’ கூட்டணியை உடைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த அணியின் முதல் கூட்டம் ஜூன் 23ம் தேதி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இக்கூட்டத்தை நடத்தியது. இதையடுத்து 2வது ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 17, 18ம் ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சி நடத்தியது. தொடர்ந்து ‘இந்தியா’ கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு ஆகியவை காங்கிரஸ் ஆதரவுடன் நடத்துகின்றன. மேலும் கூட்டணியின் 26 கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.

‘இந்தியா’ கூட்டணியில் எந்தவொரு கட்சியும் ஆட்சியில் இல்லாத, ஒரு மாநிலத்தில் (மகாராஷ்டிரா) இக்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். பீகாரில் கூட்டம் நடந்த போது, அங்கு ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சியும், பெங்களூருவில் காங்கிரசின் ஆட்சியும் நடைபெற்றது. இந்த நிலையில் மும்பையில் நடைபெற உள்ள 3வது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர சட்டப் பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார், கட்சி எம்எல்ஏக்கள் சிலருடன் ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வரானார். அவருடன் 8 எம்எல்ஏக்களும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால், கட்சித் தலைவர் சரத் பவார் பிரிவு மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் பிரிவு என தேசியவாத காங்கிரஸ் 2 ஆக பிளவுபட்டது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் புனே நகரில்  பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சரத் பவாரும் கலந்து கொண்டார்.

‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய தலைவரான சரத் பவார், அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்றும், சரத் பவாரின் மூலம் ‘இந்தியா’ கூட்டணியை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புனேவின் கோரேகான் பார்க் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் அதுல் சோர்டியாவினபங்களாவில் சரத் பவாரும், அஜித் பவாரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினர். பின்னர் சரத் பவாரும், அஜித் பவாரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமோல் மிட்காரி, ‘இரு தலைவர்களும் தங்களது குடும்ப விசயமாக சந்தித்துக் கொண்டனர். அவர்களின் சந்திப்பின் போது எதுகுறித்து விவாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது’ என்றார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 10 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தாஜ்மஹால் ஓட்டலில் விருந்து அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்திருந்தார். அப்போது பிளவுபட்ட தேசியவாத காங்கிரசை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் பெயரை ‘இந்திய கூட்டணி’ அல்லது ‘டீம் இந்தியா’ என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றும், ‘இந்தியா’ என்ற வார்த்தையின் நடுவே புள்ளிகள் வைக்க வேண்டாம் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில், 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். முதற்கட்டமாக நான்கு சிறிய குழுக்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே பீகார், கர்நாடகாவில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை நடந்தது. தற்போது மும்பையில் கூட்டம் நடைபெறவுள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவமானது. சரத் பவாரை ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் அது எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு பலம் குறைந்ததாகவே கருதப்படும்’ என்று அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!