Skip to content

பாதுகாப்புப் படை அதிரடி: காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதத் தளபதி பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர்-பசந்த்நகர் மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். (CRPF) வீரர்கள் இணைந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த தேடுதல் நடவடிக்கை சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அடர்ந்த மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்குப் படையினர் தரப்பில் அளிக்கப்பட்ட அதிரடி பதிலடியில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த பயங்கரவாதிகளில் ஒருவர், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் உயர் தளபதியான ருபானி (என்கிற) அபு மாவியா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிகரமான நடவடிக்கை மூலம் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!