Skip to content
Home » செங்கல்பட்டு அகழாய்வில் 5,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள்…

செங்கல்பட்டு அகழாய்வில் 5,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் தொன்மைச் சின்னங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அண்மையில் வல்லம் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காட்டுப் பகுதியில், ஏராளமான குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ அல்லது அவர்களது எலும்புகளைத் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள். இவை அமைக்கப்படும் முறையை வைத்து கற்குவை, கற்படை வட்டம், கற்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல் என பலவகைகளில் அவை பெயரிடப்படுகின்றன. இவைதவிர தாழியிலிட்டு புதைக்கும் சின்னங்களையும் பெருங்கல் சின்னங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இப்பகுதியில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மைச் சின்னங்கள் கிடைப்பதை அடுத்து இந்த வட்டாரத்தில் தொல்லியல் சோதனைகளை நடத்த சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அருகே பாத்தூர் செட்டிமேட்டில் சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் அகழாய்வு  செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியது. கடந்த 24 நாட்களாக இக்குழுவினர் தீவிரமாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த  அகழாய்வில் சுமார் 5000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. அதில் கிடைக்கப் பெற்ற குழந்தை எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ய சௌந்தரராஜன் முடிவு செய்துள்ளார். குழந்தை எலும்புக்கூடு கீழடியை காட்டிலும் பழமை வாய்ந்தது என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் அகழாய்வுகள் மூலமாக தமிழரின் தொன்மை வயது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதை தொடர்ந்து அப்பகுதியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதுவும்,  அவர்களுக்கு முறைப்படியான ஈமச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன  என்பதும் உறுதியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!