Skip to content
Home » மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

  • by Senthil

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை. ஒரு குடியிருப்பில் இரண்டுக்கும்  மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. அதிகாரி ஒருவர் தன்னிச்சையாக சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அ திமுக ஆட்சியில் 9 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.  இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையிலேயே அது தெளிவாக கூறப்பட்டு உள்ளது.  மின்மிகை மாநிலம் என சொன்னார்கள். அவர்கள் ஆட்சியில் 4லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு காத்திருந்தனர்.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஒன்றரை வருடத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கி உள்ளோம்.  அதிமுக ஆட்சியில் டெல்டா விவசாயிகளுக்கு தினமும் 12 மணி நேரமும், மற்ற மாவட்டங்களுக்கு 9 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழகினர்.

இப்போது நாங்கள் தினமும் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குகிறோம்.  எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்டது என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அதைப்போன்றது தான் அவரது கோரிக்கை.

இப்போது மின் உற்பத்தி பெருக்கிகொண்டு இருக்கிறோம். அடுத்த வருடம் கோடை காலத்தில் 24 மணிநேர மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  கோடை காலம் என்பதால்  இப்போது மின்சார தேவை அதிகரித்து உள்ளது.கோடை காலத்தில் தினசரி தேவை 18ஆயிரத்து 563 மெகாவாட்டாக இருக்கலாம் என கருதி, கோடை காலமான 3 மாதத்திற்கு மட்டும்  தினமும் 1,562 மெகாவாட் அளவுக்கு கொள்முதல் செய்ய  டெண்டர் கோரி உள்ளோம்.

அதிமுக ஆட்சி காலத்தில்  யூனிட் 20 ரூபாய் என்ற அளவில் வாங்கினார்கள். நாங்கள் யூனிட் 12 ரூபாய் என்ற அளவில் தான் கொள்முதல் செய்ய இருக்கிறோம். இதன் மூலம் மின்வாரியத்திற்கு பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

அனல் மின்நிலையத்திற்கு தேவையான  நிலக்கரி இன்னும் 11 நாட்களுக்கு தேவையான அளவில் உள்ளது. ஒரு குடியிருப்பில்  எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும்  அத்தனை இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.  கடந்த ஆண்டு  மார்ச், ஏப்ரல் மாதத்தில் மின் நுகர்வு  17,500 மெகாவாட் வரை  பதிவானது. இந்த ஆண்டு  ஏப்ரல், மே மாதத்தில் மின் தேவை 18, 000 மெகாவாட் வரை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  விவசாயிகளுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை  நடந்து கொண்டு இருக்கிறது. ஓரிரு வாரங்களில் பேச்சுவார்த்தி இறுதி செய்யப்பட்டு ஓப்பந்தம் ஏற்படும்.

அதிமுக ஆட்சியில் இருந்து சென்றபோது மின்வாரியத்தை ரூ.1லட்சத்து 59ஆயிரம் கோடி கடனில் விட்டு சென்றனர். இப்போது நாங்கள் ரூ.16ஆயிரத்து 511 கோடி வட்டி செலுத்தி உள்ளோம்.  அத்துடன் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டில் இருந்து 300யூனிட்டும், விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 750யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக  உயர்த்தி வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!