Skip to content
Home » சீட் கிடைக்காத விரக்தி… பாஜகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி….

சீட் கிடைக்காத விரக்தி… பாஜகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி….

  • by Senthil

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்த நிலையில் தஞ்சை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டாக்டர் ப.ராமநாதன் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் கூண்டோடு விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சை தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. கட்சி, புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. இதில் அ.தி.மு.க. 33 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி, புதிய தமிழகம் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போடடியிடுகிறது. தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியும் ஒன்று.

இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் ப.ராமநாதன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் சிவனேசன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் வேட்பாளராக சிவனேசன் அறிவிக்கப்பட்டார். எப்படியும் தங்களுக்கு தான் சீட் கிடைக்கும் என்ற நிலையில் இருந்த மாநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன் மற்றும் அதரவு ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்த டாக்டர் ராமநாதனை சந்தித்தனர்.

அப்போது டாக்டர் ராமநாதன் தனது ஆதரவாளர்களுடன் கூண்டோடு தே.மு.தி.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சேர உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து டாக்டர் ராமநாதன் கூறுகையில், சீட் கிடைக்காததால் நான் விலகவில்லை. கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காதால் விலகி பா.ஜனதாவில் இணைகிறேன் என்றார்.

விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இருந்த டாக்டர் ராமநாதன், கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், தெற்கு மாவட்ட செயலாளர், மாநில மருத்துவர் அணி செயலாளர், மாநகர் மாவட்ட செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 2 முறை தஞ்சை சட்டசபை தொகுதியிலும், ஒருமுறை தஞ்சை நாடாளுமன்ற தொகுதியிலும் போடடியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். தென்னமநாடு ஊராட்சியில் தொடரந்து 10 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தார்.

இதற்கிடையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும், களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி மாவட்ட செயலாளர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து டாக்டர் ராமநாதன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!