Skip to content
Home » சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைவைகோ, தேர்தல் பத்திரம் மூலமாக தேர்தல் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜக விற்கு கொடுத்துள்ளதாகவும் தேர்தல் பத்திரம் கொடுப்பது செல்லாது எனவும் 2018 முதல் இன்று வரை பெறபட்ட நிதியை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அரசுக்கு கொடுத்திருக்க கூடிய சம்மட்டி அடியாக நான் இதைப் பார்க்கிறேன் என தெரிவித்தார்.12 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன இதில் 6,500 கோடி ரூபாய் பா.ஜ.க மட்டும் பெற்றுள்ளது எனவும்,
90 விழுக்காடு நிதியை தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக பெற்று இருக்கின்றது எனவும், மீதமுள்ள தொகையினை 30 க்கும் மேற்பட்ட கட்சிகள் வங்கி இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்த அவர்
மத்தியில், மாநிலத்தில் ஆளுகின்ற கட்சிகள் மட்டும் ஒரு தரப்பாக தேர்தல் பத்திரம் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார் .

திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கின்றோம் என கூறிய துரைவைகோ, 2024 ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது , மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்றார். அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை எனவும்,அதிமுக பாஜகவை எதிர்ப்பதை வரவேற்கின்றோம் எனவும், பாஜக எதிர்ப்பை அடுத்து வரக்கூடிய காலத்தில் மக்களும் நம்ப வேண்டும், நாங்களும் நம்ப வேண்டும் என தெரிவித்தார். மதவாதசக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக மதிமுக கூட்டணி உருவாக்கியது கூறிய அவர் சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது எனவும் யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கின்றார்களோ அவர்களை அமலாக்கத்துறை , சிபிஐ போன்ற ஒன்றிய அரசின் ஸ்தாபனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என தெரிவித்த அவர்,
கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினர்கள் பெற்றிருந்தோம், இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டு இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம், கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் என தெரிவித்தார்.

நாட்டில் பாதுகாப்பிற்கு மோடி அரசு தேவை என அண்ணாமலை சொல்லி இருப்பது குறித்து பேசிய அவர், 2014 முதல் தற்போது வரை ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர் எனவும் விவசாயிகளின் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கடுமையான அடக்குமுறை செய்து கொண்டு இருக்கின்றனர் என்றார். மேலும் மத அரசியலை வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என பாஜக நினைக்கின்றது என தெரிவித்தார்.
விவசாயிகள் உயிரிழப்பு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இதனால் பொருட்களின் விலை உயர்வு இந்த ஒன்றிய பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் திராவிட இயக்க கொள்கைகளால் தான் படிப்பறிவு,கல்வி அறிவு, வேலைவாய்ப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி கொண்டிருக்கின்றனர் எனவும் வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக இங்கே வருகின்றனர் எனவுன் தெரிவித்த அவர்,
பாஜக சொல்வதை போல திராவிட இயக்க கொள்கைகளால் தமிழ்நாடு பாலாகி போனது என்றால், வட மாநிலத்திலிருந்து ஏன் இங்கே பிழைப்பு தேடி வருகின்றனர்? என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நிதி நிறுவன மோசடிகள், கோவில் சொத்துக்களை அபகரிப்பது,மிகப்பெரிய குற்றவாளிகள் என அனைவரும் போய் சேர்வது பாஜகவில் எனவும்,நாட்டை இவர்களிடம் இருந்துதான் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார். மணிப்பூரில் நடந்த கலவரத்துக்கு காரணம் பாஜக தான் எனவும் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!