Skip to content
Home » அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் சோனியா?…

அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் சோனியா?…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் வழிகாட்டும் குழு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், கட்சித்தலைவர் கார்கேவுக்கு வழங்கப்பட்டது.  மாநாட்டின் 2-வது நாளில் சோனியா காந்தி பங்கேற்றுப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி வெறும் அரசியல் கட்சி அல்ல. இது எல்லா மதங்களையும், சாதிகளையும், பாலினத்தையும் சேர்ந்த மக்களின் குரல்களை பிரதிபலிக்கிறது. அவர்கள் அனைவரின் கனவுகளையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டுக்கும் இது மிகவும் சவாலான நேரம். பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் எல்லா அமைப்புகளையும் கைப்பற்றி வருகின்றனர்.  நாட்டில் பா.ஜ.க. வெறுப்பு நெருப்பைத் தூண்டுகிறது. சிறுபான்மையினரையும், பெண்களையும், தலித்துகளையும், பழங்குடியினரையும் கடுமையாக குறிவைக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்தின் விழுமியங்களை அவமதிப்பதைக் காட்டுகின்றன. இன்றைய சூழல், எனக்கு நான் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததை நினைவுபடுத்துகிறது. பதவிக்காலம் முடிந்ததில் மகிழ்ச்சி கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அடுத்த ஆண்டு நடக்கிற மக்களவை தேர்தலில், பா.ஜ.க.வை தோற்கடிக்கும் இலக்கை காங்கிரஸ் தொண்டர்கள் சாதித்துக்காட்ட வேண்டும். இன்றைய அரசை மிகத்தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். நாம் மக்களிடம் சென்றடைய வேண்டும். நமது செய்தியை தெளிவாக அவர்களுக்கு சொல்ல வேண்டும். நாம் நமக்கு இருக்கிற தனிப்பட்ட ஆசாபாசங்களை ஒதுக்கித்தள்ள தயாராக வேண்டும். இந்திய ஒற்றுமை யாத்திரையுடன் காங்கிரஸ் தலைவராக எனது பதவிக்காலம் முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.  உடல் நலம் காரணமாக சோனியாக காந்தி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் தன்னுடைய பதவிக்காலம் முடிந்து விட்டதாக சோனியா அறிவித்து இருப்பது  அவர் அரசியலில்  இருந்து ஓதுங்கப்போவதற்கான அறிகுறி என மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!