Skip to content
Home » பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெம்மேலி, திப்பியக்குடியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி தனலெட்சுமி (73) கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனது கணவர் கடந்த 1998-ம் ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு விஜயராணி, சசிகுமார், பூமிநாதன், வீரராஜ், பிரபு,.செந்தாமரை என 2 மகள்கள், 4 மகன்கள் உள்ளனர். நானும் எனது கணவரின் அம்மா பாக்கியம் (107) ஆகியோர் எனது கணவரின் பெயரில் உள்ள சுவிகாரர் தெரு நெம்மேலியில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் எனது மகன்கள் வீரராஜ் மற்றும் பிரபு ஆகியோர் கடந்த 10.03.2023 தேதி காலை என்னையும், எனது மாமியாரையும் முதியோர் என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கி வீட்டிலிருந்து வெளியில் துரத்தி விட்டனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டனர்.

தொடர்ந்து கிராம மக்கள் தலையிட்டு கடந்த 15.03.2023 அன்று மீண்டும் எங்களை வீட்டில் குடியிருக்க வைத்தனர். அதன்பிறகும் எனது இரண்டு மகன்களும் என்னையும் எனது மாமியாரையும் அடிப்பதும், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவாக தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10.11.2023 அன்று மதியம் மீண்டும் எங்களை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.
வீட்டில் இருந்த கட்டில், பீரோ ஆகிவற்றை அடித்து, உடைத்து சேதப்படுத்தி வீட்டைவீட்டு வெளியேற்றிவிட்டனர். தற்போது, வீடு இல்லாமல் தெருவில் இருந்து வருகிறேன். எனது மாமியார் பாக்கியத்திற்கு 107 வயதாகிறது. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அவரால் நடக்க கூட முடியாது.

எனவே இதுகுறித்து மூத்த குடிமக்கள் சட்டம் மற்றும் விதியின் கீழ் மேற்படி படி வீட்டில் குடியிருக்க பாதுகாப்பும் மற்றும் பராமரிப்பு தொகையை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் மனுவின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!