தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக 95 சிறப்பு ரயில்கள இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 20 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், நிகழாண்டு வருகிற நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் 95 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரயில்வே சார்பில் நாடு முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு சுமார் 85 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அதைவிட சற்று கூடுதலாக 95 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், தீபாவளி பண்டிகை நேரத்தில் பயணிகளின் தேவையை பொறுத்து இந்த ரயில்களின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்புள்ளது. இதே போல, சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சுமார் 20 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த 20 ரயில்களை தவிர சென்னையில் இருந்து திருநெல்வேலி. தூத்துக்குடி. கன்னியாகுமரி. நாகர்கோவில். மதுரை ஆகிய ஊர்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை மாவட்டத்தில் இருந்து சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாக முன்பதிவு தொடங்கி விடுகிறது. அந்த வகையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்காக கடந்த செப்டம்பர் 6- ஆம் தேதி தொடங்கிய முன்பதிவு 9- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு செய்ததால் சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. எனவே சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் 95 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
