Skip to content
Home » மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்த 19 டிஎஸ்பிக்கள் மற்றும் 429 உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஓராண்டு பயிற்சி முடித்த டிஎஸ்பிக்களில் 13 பேர் பொறியாளர்கள், ஒருவர்  பல் டாக்டர், ஒருவர் முதுகலை பட்டதாரி.

429 எஸ்ஐக்களில் 175 பேர் பொறியாளர்கள், 39 பேர் முதுகலை பட்டதாரிகள், 215 பேர் இதர பட்டதாரிகள் . ஒட்டு மொத்த பயிற்சியில் முதல் பரிசான தங்க பதக்கத்தை டிஎஸ்பி சாய் பிரியா பெற்றார். 2வது பரிசான வெள்ளி பதக்கத்தை கார்த்திகா பிரியாவும், வெண்கல பதக்கத்தை மகேஷ்குமாரும் பெற்றனர். அதேபோல், எஸ்ஐ பிரிவில் பயிற்சியில் முதல் பரிசை ராகஜூன், இரண்டாவது பரிசு ராஜ்குமார், மூன்றாம் பரிசு ஸ்டாலின் அகியோர் பெற்றனர்.

இந்த பயிற்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவிற்கு டிஜிபி ராஜீவ் குமார், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், ஐஜி முத்துசாமி மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பேசியதாவது:  மக்களைக் காக்கின்ற மகத்தான பணிக்கு உங்களை முழுமையாக ஒப்படைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவல்பணி என்பது ஒரு வேலை இல்லை, அது சேவை. அதை நீங்கள் முழுவதும் உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

காவல் நிலையத்திற்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடமும் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல்துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் உங்களுக்கு இருக்கின்ற பங்கை ஆற்றுவது மூலமாக, அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக திகழவேண்டும். தொழில்நுட்பத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி குற்றங்கள் நடப்பதற்கு எந்த விதத்திலும் அனுமதிக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நல்லாட்சியின் இலக்கணம் என்பது மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்து தருவதுதான்.

அப்படிப்பட்ட வாழ்க்கையை நம்முடைய அரசு அமைத்துத் தந்திருக்கிறது. அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். குற்றமற்ற சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகின்ற அதே வேளையில், சட்டப் பரிபாலனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் நீங்கள் முனைப்பு காட்ட வேண்டும். ஒரு குற்றம் மறுபடியும் நடக்காமல் இருப்பதற்கான நடைமுறைகளையும் ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். இத்தகைய சேவைப் பணியில் இருக்கின்ற காவலர்களுடைய நலன் காக்க நம்முடைய அரசு தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!