Skip to content
Home » பிரதமர் மோடி வருகை…… தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பிரதமர் மோடி வருகை…… தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

இது வேளாண்மை சிறப்பு பெற்ற மாவட்டம்.  முத்தமிழ் அறிஞர்  கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மொழிப்போர் தியாகி சாரங்கபாணி,  வேதநாயக சாஸ்திரி , நாதஸ்வர கலைஞர் ராஜரத்தினம் ,  மூவலூர் ராமாமிர்தம் அமையார், தில்லையாடி வள்ளியம்மை ஆகியோர் பிறந்த மாவட்டம்.   இந்த மாவட்டம் மண் மணத்துடன் நெல் மணமும் ஒருங்கே பெற்றது.  காவிரி பாசனத்தால் வேளாண்மை செழித்துள்ள மாவட்டம். பதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட்ட ஒன்றரை  வருடத்திற்குள்  புதிய கலெக்டர் ஆபீஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழா மூலம்   தஞ்சை மாவட்டத்தில்  திருவோணம் புதிய தாலுகாவாக  இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. அறிவிப்புகளை இந்த அரசு உடனடியாக அரசாணையாக  செயல்படுத்தி வருகிறது.

மயிலாடுதுறை , திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு   400 கோடிக்கு மேல் திட்டப்பணிகள், 12 ஆயிரம் பயனாளிகளுக்கு 146 கோடி நலத்தி்ட்ட பணிகள் வழங்கப்படுகிறது.  மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

மானகிரி மீன் இறங்குதளம் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும். முத்துப்பேட்டையில் ரூ.10 கோடியில் மீன்இறங்குதளம் அமைக்கப்படும். பூம்புகாரில் ரூ.2 கோடியில் உலர் மீன் தளம் அமைக்கப்படும்.  மயிலாடுதுறையில்  சிறப்பான நூலகம் அமைக்கப்படும் என  அறிவிக்கப்பட்டது. ரூ.5 கோடியில் சிறப்பான நூலகம் கட்டி முடிக்கப்படும்.

இந்த பகுதியில் உள்ள 12 கல்லூரிகளில்  புதிதாக  மேசை நாற்காலிகள், கணினி   வழங்கப்படும். நீங்கள் நலமா? என்ற புதிய திட்டம்  வரும் 6ம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல்வர், தலைமை செயலாளர்,  அமைச்சர்கள்,  கலெக்டர்கள் உங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டு இந்த அரசின் திட்டங்களை செம்மைப்படுத்துவோம்.  அரசின் திட்டங்கள் உங்களை சென்றடைந்துள்ளதா  என்பதை உறுதி செய்ய இந்த தி்ட்டம்  தொடங்கப்படுகிறது.

நிதி நெருக்கடியான இந்த நேரத்தில் கூட எந்த திட்டத்தையும் நாங்கள்  நிறுத்தவில்லை.  பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மக்களின் மனசாட்சியாக விளங்குகிறது. திராவிட மாடல் அரசு.  தமிழ்நாட்டின் வரிப்பணமும், ஓட்டும் எங்களுக்கு போதும் என பிரதமர் நினைக்கிறார். வெள்ள நிவாரண நிதியாக  ரூ.37 ஆயிரம் கோடி கேட்டோம். அதை கொடுத்து விட்டு பிரதமர் இங்கு வருகிறாரா, இல்லை.   தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு இங்கு வரட்டும். அவர்கள்  ஒரு  ரூபாய்  கூட நிதி தரமாட்டார்களாம்.,  ஆனால் தங்கள்  பதவியை காப்பாற்றிக் கொள்ள ஓட்டு கேட்டு வருவார்களாம்.இதற்கு  தமிழ் மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும்  துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு என்றும் மக்கள் உறு துணையாக இருப்பார்கள், இருப்பார்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை முதல்வர்  வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை நன்றி் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!